| | பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த பெருங்களி றிழந்த பைதற் பாகன் அதுசேர்ந் தல்கிய வழுங்க லாலை வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக் | 5 | கலங்கினே னல்லனோ யானே பொலந்தார்த் | | தேர்வண் கிள்ளி போகிய பேரிசை மூதூர் மன்றங் கண்டே. |
திணையும் துறையு மவை. அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டுவந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது.
உரை: பெருஞ்சோறு பயந்து - பெரிய சோற்றையுண்டாக்கி; பல் யாண்டு புரந்த - பல்யாண்டு பாதுகாத்த; பெருங்களிறு இழந்த பைதல் பாகன் - பெரிய களிற்றை யிழந்த வருத்தத்தினையுடைய பாகன்; அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை - அவ்வியானை சேர்ந்து தங்கிய இரக்கத்தையுடைய கூடத்தின் கண்; வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந் தாங்கு- கம்பம் வறிதே நிற்கப் பார்த்துக் கலங்கின தன்மைபோல; யான் கலங்கினேன்; அல்லேனோ - யான் இறந்துபடுதலின்றிக் கலங்கினே னல்லனோ; பொலம் தார்த் தேர் வண்கிள்ளி போகிய - பொன்னான் இயன்ற மாலையையுடைய தேர் வண்மையைச் செய்யும் கிள்ளி போகப் பட்ட; பேரிசை மூதூர் மன்றங் கண்டு - பெரிய புகழினையுடைய பழைய உறையூரின் மன்றத்தைப் பார்த்து; எ - று.
மூதூர் மன்றங்கண்டு கலங்கினேனல்லனோ எனக் கூட்டுக. மன்றம் ஈண்டுச் செண்டுவெளி. அழுங்கல், முன்புள்ள, ஆரவாரமுமாம். இறந்தவென்று சொல்லுதல் இன்னாமையால் போகிய என்றார்.
விளக்கம்: பண்டைநாளில் களிறுகட்கென வேந்தரும் செல்வரும் நெல்விளை வயல்களைவிட்டு,அவற்றில் நெல்விளைவித்துஅந் நெல்லைக் களிறுகளின் உணவுக்கும் பயன்படுத்துவது மரபு.அவ்வயல்கட்கு யானைமானியம்என்றுபெயர்கூறுவர். இவ்வாறு பல ஆண்டுகளாக நெல்லைவிளைத்துக்களிற்றைப் பேணிவந்த பாகன் என்பது விளங்க, பெருஞ்சோறுபயந்துபல்யாண்டுபுரந்த பாகன் என்றார். காய் நெல்லறுத்துக் கவளங் கொளினே, மாநிறை வில்லதும் பன்னாட்காகும், நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே, வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்(புறம். 184)என வருதல் காண்க. பைதல், துன்பம். பெருங்களிறுதங்கியஆலையைக் காணுந்தோறும் பாகற்கு வருத்தம் மிகுதலின், அழுங்கல் ஆலையென்றார். அழுங்கல் என்பதற்கு ஆரவாரமென்பதும் பொருளாதலின், அழுங்கல் ஆலை யென்றது, பெருங்களிறு இறப்பதற்கு முன்பெல்லாம் ஆரவாரத்தோடு கூடியிருந்த ஆலையென்று உரைத்தலும் பொருந்தும் என்று உரைக்கின்றார். கிள்ளி சோழர்கட்குரிய பெயர்களுள் ஒன்று. கோப்பெருஞ் சோழனுடைய இயற்பெயருமாம். இறந்தானெனல் சீரிதன்மையின், போகிய என்றார். இன்னாமை: ஈண்டு அமங்கலம். |