221. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த கோப்பெருஞ்சோழன் உயிர்துறந்ததும் சான்றோர், அவன் தன் குடிச்சிறப்பும் மானமும் நல்லிசையும் கெடாமை குறித்து வடக்கிருந்த பெருமையும் பீடும் கருதி அவற்கு நடுகல் நிறுவிச் சிறப்புச் செய்தனர். அந்நடுகல்லில் அவன் பெயரும் பீடும் எழுதி மயிற்பீலி சூட்டு விழாவயர்ந்தனர். அவன் உயிர் நண்பரான பொத்தியார் அவன் பிரிவாற்றாது அவன் நடுகல்லைக் கண்டு பரவினார். அவர் நெஞ்சில் அவனுடைய புகழும் அன்பும் செங்கோன்மையும் பேரறிவும் பிறவும் தோன்றி அவன் புகழுடம்பின் முழுவடிவும் புலப்படச் செய்தன. அவர்க்கு ஆற்றாமை மீதூரக் கண்ணீர் பெருகிற்று. அவனுயிரைக் கொண்ட கூற்றுவனை நினைந்தார். நெஞ்சில் வெகுளியும் பிறந்தது. சூழ நின்ற சான்றோரை நோக்கினர். தமிழ் கூறும் நல்லுலகம் பெருந்துயர் கொள்ளச் சோழவேந்தன் புகழ்மாலை சூடி நடுகல்லாய் விளங்குகின்றான். அவனை இவ்வுலகினின்றும் மறைவித்த கூற்றுவனை நாம் ஒருங்கு கூடி வையலாம் வம்மின் என்று அறைகூவியழைத்தார். அந்த அழைப்பு அவர் நாவினின்றும் இந்த இனிய அழகிய பாட்டாய் வெளிவந்தது.
| பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே ஆடுநர்க் கீத்த பேரன் பினனே அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே | 5 | மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து | | துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில் அனைய னென்னா தத்தக் கோனை நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று பைத லொக்கற் றழீஇ யதனை | 10 | வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர் | | நனந்தலை யுலக மரந்தை தூங்கக் கெடுவி னல்லிசை சூடி நடுக லாயினன் புரவல னெனவே. |
திணையும் துறையு மவை. அவன் நடுகற்கண்டு அவர் பாடியது.
உரை:பாடுநர்க்கு ஈத்த பல் புகழன் - பாடுநர்க்குக் கொடுத்த பல புகழினையுமுடையன்; ஆடுநர்க்கு ஈத்த பேரன்பினன் - கூத்தர்க்குக் கொடுக்கப்பட்ட மிக்க அன்பினையுமுடையன்; அறவோர் புகழ்ந்த ஆய் கோலன் - அறத்திறமுடையோர் புகழப்பட்ட நீதிநூற்குத் தக ஆராய்ந்து நடத்திய செங்கோலினையுடையன்; திறவோர் புகழ்ந்த திண்ணன்பினன்- சான்றோர் புகழப்பட்ட திண்ணிய நட்பினையுடையன்; மகளிர் சாயம் - மகளிரிடத்து மென்மையுடையன்; |