பக்கம் எண் :

457

     

வளவன், செலினும் தோன்றினும் யாம் அஞ்சலம்; தண்ணிழலே மாதலால்
எனக் கூட்டி வினை முடிவு செய்க.

     விளக்கம்: பரிசில்    விடையாவது,    “வேந்தனுண்   மகிழ
வெல்புகழைந்தோர்க், கீந்து பரிசிலின்புற விடுத்தன்று” (பு. வெ. மா. 9:26).
கடையிடத்தே நின்று விடைபெற்றுச் செல்லுதல் கடைநிலை விடையாகும்.
கிணைவன் நெடுங்கடைத் தோன்றி நின்று பாடி வளவன் பரிசில் நல்கி
விடுத்தவழி, வளவன் நோன்றாள் தண்ணிழலேம்; என்னென்றஞ்சலம் என
மகிழ்ந்து பாடிச் சேறல்பற்றி இது “கடைநிலை விடையுமாம்” எனப்பட்டது.
கிணைப்பொருநன் வேந்தர் முன்றிலில் விடியற் காலத்தே சென்று நின்று
தன்னடைய கிணைப்பறையைக் கொட்டி அவ்வேந்தர்களின் வஞ்சி
முதலாகவுள்ள மறத்துறைகளைப் பாடுவது இயல்பு. அங்ஙனம் பாடுவோர்
தொடக்கத்தில் வேந்தர்க்குத் துயிலெடைப் பாட்டைப் பாடி, அவர்
துயிலுணருங்கால் அவர் செவிப்பட அவர்தம் மற மாண்புகழ்களை
யோதியின்புறுத்துத் துஞ்சிய சோழன் கிள்ளி வளவளைத் துயிலெடை பாடிய
திறத்தை “வெள்ளியும்...துயிலென்” என்று குறிக்கின்றார். ஈண்டு, “போது
பிணிவிட்ட கமழ்நறும் பொய்கைத் தாதுண் தும்பி போது முரன்றாங்கு,
ஓதலந்தணர் வேதம் பாடச், சீரினிதுகொண்டு நரம்பினிது இயக்கி, யாழோர்
மருதம் பண்ண...சூதர் வாழ்த்த மாகதர் நுவல, வேதா ளிகரொடு நாழிகை
யிசைப்ப, இமிழ்முர சிரங்க ஏறுமாறு சிலைப்ப, பொறிமயிர் வாரணம்
வைகறையியம்ப, யானையங் குருகின் சேவலொடு காமர், அன்னங் கரைய,
வணிவயமாப் புலியொடு குழும...தருமணல் முற்றத் தரிஞிமி றாப்ப, மென்பூஞ்
செம்மலொடு நன்கலஞ் சீப்ப, இரவுத்தலைப் பெயரும் ஏனவைகறை” (மதுரை
664-86) என மாங்குடி மருதனார் பாடுவது ஒப்புநோக்கியின்புறத்தக்கது.
திருப்பள்ளியெழுச்சி பாடி வேந்தன் பால் பரிசிலும் விடையும் பெறுவான்,
கிணைவன் அவ் வேந்தனது மற மாப்புகழைப் பாடு முன்பே அவன்
பெருமகிழ்வுகொண்டு “உள்ளி வந்த பரிசிலன் இவன் என” க்குய்யுடை
நெடுஞ்சூடும், மணனாறு தேறலும் வான்பூங் கலிங்கமும் தந்தானெனப் பரிசில்
நிலையைப் பரிந்து கூறுவது தாயங்கண்ணனாருடைய தமிழ்மிகு சால்பினைப்
புலப்படுத்து நிற்பது காண்க. வளவனது கொடையை மாரி யென்றலின், அதற்கு
ஏற்பத் தம்முடைய வறுமை நிலையை வெப்பு எனப் புணர்த்து “வேனிலன்ன
என் வெப்பு” என்றதும், பூத்த தாமரைகளோடு வேதி யரெடுத்த தீயை
யுவமித்து, “செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை, அறுதொழிலந்தண ரறம்
புரிந்தெடுத்த, தீயொடு விளங்கும் நாடன்” என்றதும் மிக்க
இன்பந்தருவனவாகும். ஆசிரியர் ஓரம்போகியார், “பகலில் தோன்றும்
பல்கதிர்த் தீயின். ஆம்பலஞ் செறுவின் தேனூர்” (ஐங்.57.) என்பது இங்கே
அப்புநோக்கத்தக்கது. உலகிற்கு எத்தகைய கேடு வருவதாயினும், தான்
கிள்ளிவளவன் ஆதரவு பெற்றி உறுதியுடைமை தோன்ற, பெருங்கடல்
இறுதிக்கட் செலினும், கனலிதென்றிசைத் தோன்றினும் “என்னென் றஞ்சலம்”
என்றும், “அவன் திருந்துகழனோன்றாள் தண்ணிழ லேமே” என்றும்
கூறகின்றார். தீவொன்றிற் பெற்ற பொன்கொண்டமைத்த பூணணிந்த வளவன்
என்றவிடத்துத் தீவுக்கு “நன்பொன்விளை தீவம்” (சிவக. 53) எனத் திருத்தக்க
தேவர் கூறவதனை எடுத்துக் காட்டுவாருமுளர்.