| 398. சேரமான் வஞ்சன் சேரன் குடிக்குரிய முடிவேந்தருள் ஒருவன் சேரமான் வஞ்சன். சேரரது வஞ்சிக்களம் அஞ்சைக் களமென்றானதுபோலச், சேரமான் வஞ்சன் பெயர் பிற்காலத்தே அஞ்சன் என்றாயிற்று; வஞ்சனது பாயல் நாடு பின்னர் வயனாடென்றாகி இப்போது வைநாடு (Introduction of B.L. Rice io Coorg Inscriptions Vol i.p3) என வழங்குகிறது. பாயல் மலைப் பகுதியில் வஞ்சனுக்குரியதாயிருந்த குன்று அஞ்சன் குன்றென்றிருந்து இப்போது அஞ்சுகுன்று என்ற பெயருடன் வைநாடு தாலூகாவில் உளது. இவனது ஆட்சியின் கீழிருந்த நாடு வடக்கே பாயல் நாட்டிலிருந்து தெற்கே திருவிதாங்கூர் அரசைச் சேர்ந்த அஞ்சனாடு முடிய இருந்தது. வடபகுதியில் அவன் பெயர் மறைந்ததாயினும் தெற்கில் அப் பெயர் மறையாது அஞ்சனாடு என்றே இப்போதும் வழங்குகிறது. பேரறிவும் பேராண்மையும் கொண்ட இச் சேரமான் தொகை நூல்களுட் காணப்படும் சேரவேந்தருள் மிகவும் பழையோன் எனக் கருதுதற்கிடனுண்டு. இவனைப் பற்றிய குறிப்பொன்றும் வேறு ஆசிரியர்களாற் குறிக்கப்படவில்லை. இவனது தலைநகரச் சான்றோர் பெரும் பெயர் மூதூர் எனப் பாடுவர். இந்நகர்க்கண் நண்பராகிய வேந்தர் குறுகுவது எளிதேயன்றிப் பகைமைக் கருத்தினர் எவரும் சேல்லுதல் இயலாது. இச்சேரமானும் பரிசிலர் வரிசையறிந்து சிறப்பிக்கும் பண்பு மேம்பட்டவன். சொல் தவறாத திட்பமும், சில சொற்களைக் கொண்டே அவற்றைச் சொல்வோரது உள்ளக்குறிப்பைவிரைந் துணரும் ஒட்பமும் உடையவன். இவனது பாயல் மலை மிகப்பல அருவிகளையுடையது. அச் சேரமானைப் பாடிச் சிறப்பித்தவர் திருத்தாமனார் என்னும் சான்றோர். தாமன் என்றது இயற்பெயரென்றும், திருவென்பது அவரது சிறப்பைக் குறித்து நிற்பதென்றும் தமிழறிஞர் கருதுகின்றனர். திருத்தாமனாரும் இப்பாட்டொன்று ஒழிய வேறு பாடியதாக ஒரு பாட்டும் இத்தொகை நூல்களில் காணப்படவில்லை. தாம் சேரமான் வஞ்சனைக் காணச் சென்ற போது அவன் செய்த சிறப்பை இப்பாட்டில் கிணைப் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துப் பாடியுள்ளார். இதன்கண், பொருநன் ஒருவன் சேரமானது மூதூர்க்குச் சென்று விடியலில் அவன் நெடுமனை முற்றத்தில் நின்று தன் கிணைப்பறையைக் கொட்டி இசைத்தான். விடியற்காலத்தே நிலா மறைய வெள்ளி யெழுந்து விளங்கிய போதில் சேவற்கோழி யெழுந்து விடியல் வரவறிந்து கூவுதாயிற்று. பொய்கைகளில் கூம்பிய பூக்கள் மலர்ந்தன; பாணர் தாம் கொணர்ந்த சீறியாழை முறைமை யறிந்து இசைத்தனர். அந்நிலையில் பொருநன் தன் கிணைப்பறையை யறைந்து நினைந்து வரும் பரிசிலர் ஏந்திய கலங்களில் அவர்வேண்டுவன தந்து நிறைத்து மகிழ்விக்கும் வேந்தே, எம்மை அருளுபவனாகுக என்று சொல்லித் தன் வரவை அறிவித்தான். சிலவாகிய இச் சொற்களைக் கேட்டதும் சேரமான் பேருவகை கொண்டு அன்பால் மாசுபடுந்து பீறிக்கிடந்து ஆடையைக் கடைந்து, தான் உடுத்தியிருந்த பூந்துகிலைத் தந்து பொருநனை உடுக்கச் செய்தான். பின்பு, அப்பொருநன்பால் இருந்த உண்கலம் நிறைய இனிய கட்டெளிவை நல்கி உண்பித்ததோடு, தான் உண்ணும் கலத்தில் தனக்கென இடப்பட்டிருந்த மானிறைச்சி பொரித்த பொரிக்கறியும் செவ்விய நெற்சோறும் அப்பொருநனும் அவனோடு போந்த சுற்றத்தவரும் இனிதுண்ணுமாறு கொடுத்தான். பின்பு தான் அணிந்திருந்த விலையுயர்ந்த அரிய |