| கையிற்கொண்டேகும் வலிய கோலைத் தூய்மை செய்து கொண்டு; வள் பரிந்து கிடந்த என் கெண்கண்மாக் கிணை வார் அறுப்புண்டு - சீர்குலைந்து கிடந்த என் தெளிந்த கண்ணையுடைய மாக்கிணையை; விசிப்புறுத்து - புதுவார்கொண்டு விசித்துக் கட்டி; அமைந்த புதுக்கால் போர்வை - இசைக்குரிய கண்ணமைக்கப்பட்ட புதிய வலிய தோலினுடைய; அலகில் மாலை ஆர்ப்ப வட்டித்து - அளவில்லாத மாலை போன்ற நெடிய வாரகள ஒலிக்க இயக்கி; கடியும் உணவென்னக் கடவுட்கும் தொடேன் - கிணைக்கண்ணுறையும் தெய்வத்துக்கு வழிபாடாற்றக் கருதியவழிப் பெறற்குரிய உணவைப் பெறுவது தாழ்க்கு மெனக் கருதி அத்தெய்வத்தையும் வழிபடாது; கடுந்தேர் அள்ளற்கு அசாவா - வலிய தேராகிய வண்டி சேற்றில் அழுந்திய வழி அதற்குத் தளராத; நோனசுவல் பகடே - யான் வேண்டி வந்தது என வலிய கொண்டையையுடைய பகடே யான் வேண்டிவந்தேன் என்று; ஒன்று யான் பெட்டா அளவை - ஒன்றை யான் விரும்பிக் கேளாமுன்பே; அன்றே ஆன்றுவிட்டான் - அப்பொழுதே கொடுத்தற்கமைந்து என்பால் வரவிடுவானாய்; விசும்பின மீன் பூத்தன்ன - வானத்தே விண்மீன்கள் பூத்தாற்போல; உருவப் பன்னிரை ஊர்தியொடு நல்கியோன் - அழகிய நிறத்தையுடைய பலவாகிய ஆனிரைகளை ஊர்ந்துசெல்லற்கேற்ற காளைகளோடே நல்கினான்; சீர்கொள இழுமென இழிதரும் அருவி - தாளம் அமைய இழுமென்னும் ஓசையுடன் இழியும் அருவிகளையுடைய; வான்தோய் உயர்சிமைத் தோன்றிக்கோ - வானளாவ உயர்ந்த உச்சியுயைடைய தோன்றி மலைக்குத் தலைவன் எ - று.
அடுப்பிலேற்றாது காடி நீரில் சோற்றைப் பெய்து வைத்திருக்கும் உலை, வெள்ளுலையெனப்பட்டது. மாங்கனியிற் சாறுபிழிந் தமைக்கும் நறும்புளியைப் பிறரும், வண்டளிர் மாஅத்துக், கிளிபோற் காய கிளைத்துணர் வடித்துப் புளிப்பத னமைத்த புகுக்குடம் (அகம். 37) என்று கூறுதல் காண்க. மோடு, பெருமை, கோட்டுமீன், சுறாமீன். முரியாத அரிசிச் சோற்றை முழுவவிழப் புழுக்கல் என்றார். மூழ்த்தல், மூடுதல்; வாய் மூழ்த்தனரென்றாற்போல. வையும் நெல்லும் பிரிக்கும் தொழிலில் பொழுதெல்லாம் கழித்தோயும் களமரை, அழிகளிற்படுநர் என்றார். களிமயக்கால் இரவுப்போதில் உணர்வற்றுக் கிடந்தால் விடியலிற் பழஞ்சோறுண்ணும் இயல்புபற்றி, களியடவைகின் பழஞ்சோ றயிலு மென்றார். ஊன் விற்று உணவுப்பொருள் பெற்றுக் கிணைமகள் புளிங்கூழ் சமைப்பது காலவரையறைக்ககப் படாமையின், நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக் கிணைமகளட்ட பாவற் புளிங்கூழ் என விரித்தோதினார். பாவல் புளிங்கூழ், கூழ் சிறிதும் நீர் பெரிதுமாகச் சமைக்கப்பட்ட புளிங்கூழ். புளிக்க வைத்து அடுங்கூழ், புளிங்கூ ழெனப்பட்டது. பொழுது மறுத்துண்டலாவது, |