| உண்டற்குரிய காலவரவு நோக்கியிருந் துண்ணாது, உணவு வரவு நோக்கியிருந்துண்பது; பழைய வுரைகாரர் உண்ணுங்காலை மாறி யுண்ணுதல் (புறம். 248 உரை) என்பது காண்க. மறவன் என்பதே போர்க்குரிய மறமும் வீரமும் உடைமையுணர்த்தி நிற்றலின், மள்ளன் என்பது உழவுத் தொழில் வன்மையுடைமை குறிப்பதாயிற்று. தோன்றிக்கோவின் தகைமையறிந் துரைப்போர். அவன் இக் கிணைவனது இசையறிந்து கொடை வழங்கும் உள்ளத்தனாதலை யறிந்து வந்துரைத்தலின், என்னே என வியந்தனர். கிள்ளி வளவன்பாற் செல்லக் கருதி வந்தவர், தோன்றிக்கோவின் வள்ளன்மையும் அவன் தன்பாற் கொட்டிருக்கும் செலுத்துகின்றாராகலின், மீப்படர்ந்திறந்து என்றார். வளவற்தே யுரித்தாய் அவனையே வரைந்து ஒன்றியிருந்த நெஞ்சம் தோன்றிக்கோவுக்கு உரித்தாய் அவன்பால் அன்பு செய்தற்கிடனாய் நிற்றலின் படர்தலும் இறத்தலும் உளவாயின. கிணைவன் முதலிய இரவலர் கையில் கோல்கொண்டு சேறல் மரபு. போர்வை, போர்க்கப்படும் தோல். மாலை போறலின், நெடிய வார்கள் மாலையெனப்பட்டன. முரசு, கிணை முதலியவற்றில் தெய்வ முறையு மென்பது பண்டையோர் கொள்கை; கடியுமுணவென்னக் கடவுட்கும் தொடேன் என்பதற்கு, என்னவும் என உம்மை தொக்கதாகக் கொண்டு, வழிபடாத வழித் தெய்வம் உணவு பெறாவாறு கடியும் என்று எம்மிற் சான்றோர் சொல்லியிருப்பவும். விரையச் செல்வது குறித்துக் கடவுட்கும் வழிபாடாற்றாது செல்வது குறித்துக் கடவுட்கும் வழிபாடாற்றாது செல்வேன் என்றுரைப்பினு மமையும். பெட்டல், விரும்புதல். வாயைத்திறந்து கேட்பதற்கு முன்னே பன்னிரையும் ஊர்தியும் பண்ணுமாறு தன் ஏவலரைப் பணித்தாரென்பார், ஒன்றியான் பெட்டா அளவை யன்றே யான்று விட்டனன் என்றார். அத்தை: அசைநிலை. அரிசி உலைக்கொளீஇ நறும்புளியும் கொழுங்குறையும் வள்ளையும் பாகலும் இன்னொடு விரைஇ. புழுக்கலும், படுநர்வைகின், வளவன், அவற் படர்தும், செல்லேன், செல்லேன் நோக்கேன், உண்டியேன் இருந்தனெனாக, என, இறந்து மண்ணி விசிப்புறுத்து, வட்டித்து, தொடேன், எனப் பெட்டா அளவை அன்றே, ஆன்று, விட்டனன்: தோன்றிக்கோ, நல்கினான் எனக்கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: உண்டற்கொருட்டு வரைந்து தொகுக்கப்பட்ட நெல்லை வேண்டும் போதெல்லாம் எடுத்துக் குற்றிக்கொள்ப வாதலால் அடுமகள் முகந்துகொண்ட நெல்லை அளவா வெண்ணெல் என்றார்; இனி அளந்துகொண்ட நெல்லென்றுரைப்பினு மமையும். உலக்கையின் பருமை குற்றலின்மே னின்றது. காடி நீரையும் மோர் பெய்த நீரையும் உரைக்கிடுபவாதலால் காடி வெள்ளுலைக் கொளீஇ யென்றார். நறும்புளியும் பாகலும் வேறு கறிக்கும் இனமான சாந்தும் காயமும் பிறவும் இனமெனக் குறிக்கப்பட்டன. சோறுவேறென்னத் தோன்றாதவாறு தோன்ற, ஐதுற மூழ்ப்பப் பெய்த புழுக்கல் என்றார். வெய்துற என்றும் துய்த்தலையென்றும் காணப்படும் பாடம் பொருள் விளங்கவில்லை. காவிரிக்கிழவனான கிள்ளிவளவனைக் காண்டற்குச் செல்லும் ஐயூர் முடவனார் விழியிடையே சிறப்புற்றிருந்த தோன்றிக் கோமானான தாமான் என்பானைப் பாடுகின்றாராகலான், காவிரிக்கிழவன்...படர்தும் என்று கூறுகின்றார், |