| இடையே தாமான் தோன்றிக்கோனை அறிந்தோர் முடவனாருக்குக் கூறியது, அறவர்...உண்க என்றது. முடவனார் தோன்றிக்கோனது ஊர்வயின் தங்கிமேலே உரையூர்க்குச் செல்லும் திறம் இன்றி, பகடொன்றில்லாக் குறையுற்றிருந்தாராக, அங்கிருந்தோர் அவருக்கு அவனது பெருமையை யெடுத்துக் கூறினர்; அதுகேட்டு அவர், காவிரிக் கிழவன்...இருந்தேன் என்றார். அமுது உண்க என்றது, நிறைந்த செல்வம் பெறுக என்பது குறித்து நின்றது; அமுத முண்க நம் மயலிலாட்டி (நற். 65) என்றாற்போல. தோன்றிமலை திண்டுக்கல்லுக்கு மேற்கில் பதினைந்து கல்லில் உளது; இப்போது அங்கே தான்றிக் குடியென்றோர் மலையிடை ஊர் உளது; அது காப்பிச் செடியும் ஏலமும் பயிராகும் வளவிய இடம். இனி, கருவூர்க் கண்மையில் தான்தோன்றிமலை யென்றொரு குன்றுண்டு; அது தாமான் தோன்றி மலையாக இருக்காலமென்று கூறுவர். திருச்சிராப் பள்ளிக்குத் தெற்கிலுள்ள குளத்தூர்ப் பகுதியில் இருக்கும் ஐயூர் (சிற்யையூர்) இம் முடவனார்க்குரியதாயின், கருவூர்க்கண்மையிலுள்ள தான்தோன்றி மலையைத் தாமான் தோன்றிமலையாகக் கொள்ளலாம். இது நன்கு ஆராயத்தக்கது. 400. சோழன் நலங்கிள்ளி தமிழகத்தை நினைக்கும்போது, இதனைப் பொதுவாகத் தமக்கு உரிமையாகவுடையவர் தமிழ் மூவேந்தர் என்பது நினைவுக்கு வரும். சான்றோரும் இது பற்றியே இதனைப் பொதுமை சுட்டிய மூவருலகம் (புறம். 357) என்று கூறினர். சோழர் பாண்டியர் சேரராகிய மூவரையும் உலகியலில் மக்கட்கு உறுதித்துணையாகப் பண்டையோர் கருதினாராகலின், உறுதிப் பொருளாகிய அறம் பொருள் இன்பங்களைப் போல இவ் வேந்தர் மூவரும் உளர் என்பதும் அந்நாளில் நிலவிய கொள்கையாகும். அதனால் ஒருவர் மேம்பட இருவர் அவர் வழிப்பட நிற்பது இயல்பாயிற்று. ஒருகால் சோழ வேந்தனான நலங்கிள்ளி வடபுலத்தரவர் துஞ்சாக் கண்ணராய் நெஞ்சு நடுங்க அவலமுற்று மறப்புகழ் கொண்டு விளக்க முற்றானாக. அவனைச் சிறப்பித்துப் பாடிய ஆசிரியர் கோவூர்கிழார், சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும், அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல. இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை, உருகெழு மதியினிவந் துசேண் விளங்க (புறம். 31) நல்லிசை நிறுவியதை விதந்தோதிப் பண்டைய தமிழ்க் கொள்கையை நிறுவியிருத் தலைக் காணலாம். சோழன் நலங்கிள்ளி சோழநாட்டின் கீழ்ப்பகுதியிலிருந்து ஆட்சி செய்தவன். இவன் புலவர் பாடும் பெரும்புகழ் படைத்தவன்.இவனை, மென்மையுன் மகளிர்க்கு வணங்கி, வன்மையின் ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை (புறம். 68) என்பர். பாணர், பொருநர் முதலிய பரிசிலர்க்குப் பெருவளம் நல்கிப் பேரின்பம் எய்துபவன். இதனால், இவனைப் பாடிப் பரிசில் பெற்றவர் பின்பு பிறரெவரையும் பாடிப் பரிசில் பெற விரும்பார். நலங்கிள்ளி நசைப்பொருநரேம், பிறர்பாடிப் பெறல்வேண்டம் (382) என அவர்கள் கூறுவது காண்க. இத்ததைய சிறப்புடைய வேந்தனுக்கு ஆசிரியர் கோவூர்கிழார்பால் பெருமதிப்புண்டு. பல காலங்களில் கோவூர்கிழார் பலவேறுவகையில் நலங்கிள்ளியைப் பாடிச் சிறப்பித்துள்ளார். |