222. கோப்பெருஞ்சோழன் கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கச்சென்றபோது உயிர்த்தோழரான பொத்தியாரும் வடக்கிருக்க ஒருப்பட்டனர். அப்போது அவர் மனைவியார் கருவுற்றிருந்ததை யறிந்திருந்த சோழன், நினக்கு மகன் பிறந்தபின் வருக என்று பணித்தான். பொத்தியாரும், சான்றாண்மை மிக்க சான்றோராகலின், அதற்கு உடன்பட்டு மனைவாழ்வில் இருந்து வந்தார். ஆயினும், கோப்பெருஞ்சோழன் இறந்த போதும் நடுகல் நிறுவிச் சிறப்புச் செய்தபோதும் உடனிருந்து எல்லாப் பணிகளையும் சிறப்புறச் செய்தவரும் பொத்தியாரேயாவர். சின்னாட்களுக்குப்பின் பொத்தியார்க்கு மகனொருவன் பிறந்தான். எப்பொழுது தன் மனைவி கருவுயிர்ப்பது? எப்பொழுது தாம் கோப்பெருஞ் சோழனுடன் வடக்கிருப்பது? என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்த பொத்தியார்க்கு மனக்கவலை நீங்குவதாயிற்று.வடக்கிருக்கச் செல்வோர் செய்யும் ஏற்பாடுகளைச் செவ்வையாகச் செய்துவிட்டு ஒரு நன்னாளில் பொத்தியார் கோப்பெருஞ்சோழன் நடுகல்லாயிருக்கும் இடத்திற்குச் சென்றார். அவன்பால் அவர்க்கிருந்த அன்பும் நட்பும் பெருக்கெடுத்தன. அந்நடுகல் சோழனது மெய்யுருவை அவர் மனக் கண்ணிற்குக் காட்டிற்று. அவர் மனங்குழைந்து வேந்தே! யான் வடக்கிருக்க வேண்டும்; அதற்கு ஏற்ற இடம் யாது? கூறுக என்று வேண்டினார். அவ்வேண்டுகோளே இப்பாட்டு.
| அழலவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென என்னிவ ணொழித்த வன்பி லாள | 5 | எண்ணா திருக்குவை யல்லை
| | என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே. |
திணையும் துறையு மவை. அவனைத் தன்மகன் பிறந்தபின் பெயர்த்துச்சென்று பொத்தியார் எனக்கு இடந்தாவென்று சொற்றது.
உரை: அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி - தீயால் விளங்கிய ஒளியையுடைய ஆபரணத்தாற் சிறந்த வடிவினை யுடையளாய்; நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த - நின் நிழலினும் ஒருபொழுதும் நீங்காத நீ விரும்பத்தக்க மனைவி பெறப்பட்ட; புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென- புகழமைந்த பிள்ளையானவன் பிறந்தபின் வா எனச் சொல்லி; என் இவண் ஒழித்த அன்பிலாள - என்னை இவ்விடத்தினின்றும் போக்கிய என்னோடு உறவில்லாதவனே; எண்ணாது இருக்குவையல்லை - உன்னோடு என்னிடை நட்பைக் கருதாது இருப்பையல்லை; இசை வெய்யோய் - புகழை விரும்புவோய்; என்னிடம் யாது - நீ எனக்குக் குறித்த இடம் யாது சொல்வாயாக; எ - று.
மற்று: அசை. அழல்போலப் பாடஞ்செய்யும் மேனியெனினு மமையும். |