விளக்கம்: தீயாற் சுடச்சுடப் பொன் விளக்கமுறுதலின், பொன்னாற் செய்யப்பட்ட இழைகள், அழலவிர் வயங்கிழை யெனப்பட்டன. அழலை மேனிக்கு இயைபுபடுத்து, அழலவிர்மேனி யென்பதற்கு அழல் போலப் பாடஞ்செய்யும் மேனி எனினுமமையும் என்று உரைகாரர் கூறினர். பாடஞ்செய்தல், ஒக்குமாறு மஞ்சள் முதலியனவணிந்து செம்மையுறுத்தல். நீக்கமின்றியுறைதற்கு நிழல் உவமை; செல்வுழிச் செல்வுழி மெய்நிழல்போல, ஆடுவழி யாடுவழி யகலேன் மன்னே (அகம். 49) என்று பிறரும் கூறுதல் காண்க. அறிவறிந்த மகனைப் பெற்றோர் இம்மையில் நற்புகழ் பெறுதலின் புகழ்சால் புதல்வன் என்றார்; இம்மை யுலகத் திசையொடும் விளங்கி மறுமை யுலகமும் மறுவின் றெய்துப...சிறுவர்ப் பயந்த செம்மலோர் (அகம். 66) என்று சான்றோர் கூறுவது காண்க. ஒழித்ததுபற்றி அன்பிலாள என்றார்; அன்புமிகவுடையனென்பது கருத்தாதலின், என்னிடம் யாது என்றார். ---
223. கோப்பெருஞ் சோழன்
மேற்கூறியவாறு வடக்கிருக்க விரும்பித் தனக்குரிய இடம் குறிக்குமாறு வேண்டிய பொத்தியார் மனக்கண்ணில் கோப்பெருஞ் சோழன் தோன்றித் தான் வடக்கிருந்த இடத்தருகே இடம் காட்டினார். அதனைத் தெளிந்துணர்ந்த பொத்தியார்க்கு வியப்புப் பெரிதாயிற்று; சோழன்பால் உண்டாகிய பேரன்பும் மேன்மேலும் மிகுந்தது; அவனது நட்பின் பெருமாண்பு விளங்கித் தோன்றிற்று. ஆகவே அவர்க்கு வடக்கிருப்பதில் உள்ளம் உறைத்துநின்றது. குறித்த இடத்தில் இருந்து வடக்கிருக்கும் நற்றவத்தை மேற்கொண்டார். சோழன் நட்புரிமையால் இடங்குறித்த பேரன்பு நெஞ்சின்கண் மிக்கிருந்தமையின், அதனை இப்பாட்டால் வெளிப்படுத்துகின்றார்.
| பலர்க்குநிழ லாகி யுலகமீக் கூறித் தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி நிலைபெறு நடுக லாகியக் கண்ணும் இடங்கொடுத் தளிப்ப மன்ற வுடம்போ | 5 | டின்னுயிர் விரும்புங் கிழமைத் | | தொன்னட் புடையார் தம்முழைச் செலினே. |
திணையும் துறையு மவை. கல்லாகியும் இடங்கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது.
உரை: பலர்க்கு நிழலாகி - பலர்க்கும் அருளுடைமை யான் நிழலையொத்து; உலகம் மீக்கூறி - உலகத்தார் மிகுத்துச் சொல்ல; தலைப்போகன்மையின் - உலகத்தையாளுந் தன்மை முடியச் செலுத்துதற்கு மறுமையை நினைத்தால் முடிவுபோகாமையின்; சிறுவழி மடங்கி - வடக்கிருத்தற்கு வரைந்த சிறிய இடத்தின்கண் இருந்து; நிலைபெறு நடுக |