| வினை முடிவு செய்க. இது சுற்றத்தார் இரங்கிக் கூறுதனின், ஆனந்தப்பையுளாயிற்று.
விளக்கம்: சூளையினின்றெழுந்து கருத்துத் திரண்டுசென்று வானத்தில் ஒடுங்கும் புகையை நீங்கி இருள் ஓரிடத்தே நின்றாற் போன்ற நிறத்தையுடைத்தாய் வானத்திற் சென்று தங்கும் என்றார். குரு, நிறம்; அது குரூஉவென நீண்டது. வானத்தின்கட்சென்று ஒடுங்கிவிடுதலின், புகையை ஊன்றும் என்றார். செய்தற்குரிய தொழிலைச் செய்ய மாட்டாமையும் ஒருவற்கு மிக்க வருத்தத்தை நல்குமாகலின், யாங்காகுவை என இரங்கினார் நல்லிசையும் விரிகதிரையும் உடைய ஞாயிறு என இயையும். ஞாயிறு பலராலும் புகழப்படுமென்பது, உலகமுவப்ப வலவனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு (முருகு. 1-2) என்று சான்றோர் கூறுதலாலும் தெளியப்படும். ஞாயிறு வானத்தின் கண் தோன்றிப் பொழுதை வரையறுத்து அவரவரும் தத்தம் தொழில் தரீஇயர் வலனேர்பு விளங்கி (அகம்.298) எனப் புலவர் புகழுமாறு காண்க. செம்பியர் சோழர்க்கொரு பெயர்; தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் என்றாற் போல. வளவனது புகழுடம்பு நிலவுலக முற்றும் பரந்து வானளவும் உயர்ந்து விளங்குதலின், அதனை முற்றும் மூடிச் கவிக்கவல்ல தாழியன்றோ செயற்பாலது; அதனைச் செய்வதாயின் நிலவட்டம் திகிரியாகவும் மேருவென்னும் பெருமலை மண் திரளாகவும் கொண்டு தாழி வனைதல் வேண்டுமே! அதனைச் செய்யவல்லுவையோ? நினக்கு அஃது இயலாதன்றோ என்பாராய், இருநிலந் திகிரியாப் பெருமலை மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கு என்று கூறுகின்றார். ஆனந்தப் பையுளாவது இன்னதென்பார், விழுமங் கூர வேய்த்தோளரிவை, கொழுநன் வீயக் குழைந்துயங்கின்று (பு.வெ.மா.சிறப்.பொது.13) என்பதை எடுத்துக்காட்டி, இதனைப் பாடுபவர் ஐயூர் முடவனாரால் கண்டு, இது சுற்றத்தார் இரங்கிக் கூறுதலின் ஆனந்தப்பையுளாயிற்று என்றார். ஐயூர் முடவனார் பெயர் ஐயூர் மூவனார் என்றும் ஏட்டில் காணப்படுகிறது. உறையூர் முடவனார் என்றும் பாடமுண்டெனத் திரு. சாமிநாதையரவர்கள் குறிக்கின்றார்கள். ---
229. கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் இறுதிநாளில், அவன் இறத்தற்கு ஏழு நாட்களுக்குமுன் நாட்டில் புதுமையான நிகழ்ச்சி யொன்றுண்டாயிற்று. தீ நிமித்தங்கள் பல உண்டாயின. அவற்றைக் கண்ட சான்றோருள் கூடலூர் கிழார் என்பார் ஒருவர். அவர் வானநூல் வல்லவர்; விண்ணிடத்தே ஒருவிண்மீன் தீப் பரக்கக்காற்றாற் பிதிர்ந்து கிளர்ந்து வீழ்ந்தது கண்டார். கார்த்திகை, அனுடம், உத்திரம், மிருகசீரிடம் முதலிய விண்மீன்களின் நிலையினைக் கண்டார்; இந் நிகழ்ச்சிக்கு ஏழாம் நாளில் உலகாளும் வேந்தன் உயிர் நீப்பன் என்று உணர்ந்தார். வேந்தன் யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரவிரும்பொறையாகலின் அவற்கு என்ன தீங்குநேருமோ எனக் கலக்கமுற்றார். அவர் கலங்கியவாறே ஏழாம் நாளில் சேரமான் உயிர் துறந்தான். யானைகள் கையை நிலத்தே நீட்டிவைத்து உறங்கின; முரசம் |