பக்கம் எண் :

75

     
 இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்
5உலகுபுகத் திறந்த வாயிற்
 பலரோ டுண்டன் மரீஇ யோனே.

   திணையும் துறையும் அவை. அவனை யவர் பாடியது.

    உரை: நோகோயான் - நோவக்கடவேனோ யான்; மாகாலை தேய்க -
எனது வாழக்கடவ மிக்க நாள் மாய்வதாக; பிடியடி யன்ன சிறுவழி மெழுகி
- பிடியினது அடிபோன்ற சிறிய இடத்தினை மெழுகி; தன் அமர் காதலி -
தன்னை மேவப்பட்ட காதலி; புல்மேல் வைத்த இன் சிறு பிண்டம் -
புல்மேல் வைக்கப்பட்ட இனிய சிறிய பிண்டத்தை; யாங்கு உண்டனன்
கொல் - எவ்வி உண்டான் கொல்லோ; உலகு புகத் திறந்த வாயில் -
உலகத்தார் யாவரும் புகும் பரிசு திறந்த வாயிலையுடைய; பலரோடு
உண்டல் மரீஇயோன் - பலரோடுங் கூடி யுண்டலை மருவியோன்; எ - று.


    இன் சிறு பிண்டமென்றது இகழ்ச்சிக் குறிப்பு. பலரோடு உண்டலை
மரீ இயோன் பிண்டம் யாங்கு உண்டனன்கொல் எனக் கூட்டுக.

    விளக்கம்: எவ்வி கிடந்து உயிர் நீத்த இடத்தை வட்டமாக
மெழுகினமை தோன்றப் “பிடியடியன்ன சிறு வழி” யென்றார். இலையிட்டு
அதன்மேல் தருப்பைப்புல்லை வைத்து அதன்மேல் இனிய சுவையில்லாத
உணவைப் பெய்து படைத்துக் கைம்பெண்கள் உண்பது இயல்பாதலால்,
அதனை, “புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம்” என்றார். இனிய சுவையின்றி
ஒரு பொழுதைய உணவாதலால், அதனை “இன் சிறு பிண்டம்” என்றது
குறிப்பாய் இகழ்ந்தவாறாயிற்று. எவ்வியின் வள்ளன்மையை நினைந்து
வியந்து கூறலின், “யாங்குண்டனன் கொல்” என்றார். இவ்வாறே
அதியமானைப் பாடிய ஒளவையார், “நாகரி சிறு கலத் துகுப்பவும்
கொள்வன் கொல்லோ” (புறம்: 232) என்பது காண்க.

---

235. அதியமான் நெடுமான் அஞ்சி

     அதியமான் இறந்தபின் ஒளவையாரை யுள்ளிட்ட சான்றோர்
கூட்டத்தில் அஞ்சியின் கொடை நலமும், புலவர் முதலியோரை அவன்
பேணுந் திறமும் பொருளாகப் பேசப்பட்டன. ஒளவையார் அவனோடு
இருந்து அவனது வள்ளன்மையைத் தெளிய அறிந்திருந்தாராதலின்,
அதனைஇப் பாட்டின்கண் விரியக் கூறியுள்ளார். அஞ்சியின் மார்பில்
தைத்து அவன் உயிருண்ட வேல், பாணர் புலவர் முதலியோர்
வாழ்க்கையையே சீரழித்து விட்டதென்றும், எனவே, நாட்டில் பாடுவோரும்
பாடுவோர்க்கு ஈவோரும் இலராயினர் என்றும்,ஈயாது வைத்து உயிர் துறந்து
கெடும் கீழ்மக்களே மிகப் பலராக இவ்வுலகில் உள்ளனர் என்றும்
படிப்போர் நெஞ்சுருகிக் கண்கலுழுமாறு பாடியுள்ளார்.