அகுதைகண்தோன்றிய - அகுதையிடத்து உளதாகிய; பொன்புனை திகிரியின் பொய்யாகியர் - பொன்னாற் செய்யப்பட்ட ஆழிபோலப் பொய்யாகுக; இரும்பாண் ஒக்கல் தலைவன் - பெரிய பாண் சுற்றத்திற்கு முதல்வன்; பெரும்பூண்போர் அடுதானை எவ்வி மார்பின் - பேரணிகலத்தினையுடைய போரின் கட் கொல்லும் படையினையுடைய எவ்வியது மார்பின்கண்; எஃகுறு விழுப்புண் பல என - வேல் தைத்த சிறந்த புண் பலவென; கைகுறு விடியல் இயம்பிய குரல் - வைகுதலுற்ற விடியற்காலத்துச் சொல்லிய வார்த்தை; எ - று.
பெரும்பூண் மார்பென இயையும். திகிரியென்றது திகிரிதைத்த தென்று பிறந்த வார்த்தை; பொன் ஈண்டு இரும்பு. அடுக்கு விரைவின் கண் வந்தது. இயம்பிய குரல் பொய்யாகியர் எனக் கூட்டுக.
விளக்கம்: அகுதை யென்பவன் பண்டை நாளில் கடல் சார்ந்த ஊராகிய கூடல் என்ற ஊர்க்குத் தலைவன். மறப்போர் புரியும் சான்றாண்மையும் பரிசிலர்க்குக் களிறு வழங்கும் கைவண்மையும் உடையவன். இவன் பெரிய தானையையுமுடையன் என்ப. இவன்பால் பொற்றிகிரி யுண்டு; ஆதலின், இவனை வெல்வது எவர்க்கும் ஆகாதென்றொரு பெருமொழி நாடெங்கணும் பரவியிருந்தது. அதனால் பலரும் அவனையஞ்சி யிருந்தனர்; முடிவில் ஒருகால் போருண்டாகிய போதுஅகுதைகொல்லப்பட்டான். பொற்றிகிரியுண்டென்பது பொய்யாயிற்று. அச் செய்தி போல எவ்வி மார்பிற் புண்ணுற்றிறந்தானென்ற சொல்லும் பொய்யாகுக வென்பார், அகுதைகண் தோன்றிய பொன்புனை திகிரி போலப் பொய்யாகியர் என்றார். ---
234. வேள் எவ்வி வெள்ளெருக்கிலையார் விடியலிற் கேட்ட செய்தி உண்மையே யாயிற்று. அவர்க்குண்டாகிய வருத்தத்துக்கு அளவில்லை. யாவர்க்கும் வரையாது அளித்துப் பலரோடு இருந்துண்டலையே பெரிதும் விரும்பி வாழ்ந்த வேள் எவ்வியின் பிரிவு வெள்ளெருக்கிலையார் நெஞ்சில் நிலைபெற நின்று வருத்திற்று. நாட்கள் பல கழிந்தன. ஒரு நாள் அவர் எவ்வியின் மனைக்கு வந்தார். கைம்மை நோன்பு நோற்கும் அவன் மனைவியர் எவ்வி கிடந்து உயிர்நீத்த இடத்தை மெழுகிப் புல்லைப் பரப்பி அதன் மேல் இனிய சிறு உணவை வைத்துப் படைத்து வழிபடுவதைக் கண்டார். உலகமுழுதும் வரினும் வருவார்க்குத் தடை யாது மின்றித் திறந்த வாயிலை யுடையனாய்ப் பலரோடும் இருந்துண்ணும் வள்ளலாகிய வேள் எவ்வி புல்மேல் வைக்கப்பட்ட இச் சிறு பிண்டத்தை விரும்பியேற்பனோ என எண்ணிப் புண்ணுற்ற நெஞ்சினராய்க் கதறிப் புலம்புனார். அப்புலம்புரை இப் பாட்டாகும். | நோகோ யானே தேய்கமா காலை பிடியடி யன்ன சிறுவழி மெழுகித் தன்னமர் காதலி புன்மேல் வைத்த |
|