| போர்ப்புறு முரசங் கறங்க | 5 | ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே. |
திணையும் துறையு மவை. அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசி யார் பாடியது.
உரை: திண் தேர் இரவலர்க்கு ஈத்த - திண்ணிய தேரை இரவலர்க்கு ஈத்த; தண் தார் அண்டிரன் வரூஉம் என்ன - குளிர்ந்த மாலையையுடைய ஆய் வருகிறான் என்று; ஒண்தொடி - ஒள்ளிய தொடியினையும்; வச்சிரத் தடக்கை நெடி யோன் கோயிலுள் - வச்சிராயுதத்தையுமுடைய விசாலமாகிய கையையுடைய இந்திரனது கோயிலுள்ளே; போர்ப்புறு முரசம் கறங்க - போர்த்தலுற்ற முரசம் முழங்க; விசும்பினான் ஆர்ப்பெழுந்தன்று - வானத்தின்கண் ஓசை தோன்றிற்று; எ - று.
இப் பெற்றிப்பட்ட வள்ளியோனை வானோர் எதிர்கோடல் தப்பா தென்றவாறு. இது தற்குறிப்பேற்ற மென்பதோர் அணிப்பொருட்டாய் நின்றது.
விளக்கம்: மோசியின் பெயரால் தமிழ்நாட்டில் பல வூர்களுண்டு; தொண்டை நாட்டில் மோசிப்பாக்கம் என்றும், நடு நாட்டில் மோசு குளத்தூரென்றும், பாண்டி நாட்டில் மோசி குடியென்றும் இருத்தல் காண்க. அண்டிரன் என்பதற்கு ஆய் என உரை கூறப்படுவதால், ஆய் என்பது குடிப்பெயரென்றும், அண்டிரன் என்பது இயற்பெயரென்றும் உணர்தற்கு இடமுண்டாகிறது. நெடியோன், இந்திரன். இப்பெற்றிப் பட்ட...தென்றவாறு என்றது குறிப்பெச்சம். ஒரு புலவன் தான் கருதிய குறிப்பை உயர்த்துச் சொல்வது தற்குறிப்பேற்றம். அண்டிரனைத் தேவருலகத்து வேந்தன் எதிர்கொண்டு வரவேற்பன் என்பது மோசியார் குறிப்பு; இதனை இந்திரன் கோயிலுள் ஆங்கு வரும் அண்டிரனை வரவேற்றற்பொருட்டு முரசு முழங்குகிறது என உயர்த்துக் கூறுதலால் தற்குறிப்பேற்றமாயிற்று. ---
242. ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் ஒல்லையூர் என்பது புதுக்கோட்டைத் தனியரசின்கீழிருந்த ஊர்களுன் ஒன்று. இப்போது அதற்கு ஒலியமங்கலம் என்ற பெயர் வழங்குகிறது. இதனைச் சூழவுள்ள பகுதி ஒல்லையூர் நாடெனப்படும். சோழ நாட்டிற்கும் பாண்டிநாட்டிற்கும் எல்லையாக ஓடும் தென்வெள்ளாற்றின் தென்கரை தென்கோனாடு என்றும், வடகரை வடகோனாடு என்றும் வழங்கின. தென் கோனாட்டின் மேலைப்பகுதி ஒல்லையூர் நாடு. இந்த ஒல்லையூரில் வாழ்ந்த கிழானுக்குப் பெருஞ்சாத்தன் இனிய மகனாய்ப் பாண்டிநாட்டின் வடகோடியில் இருந்து சோழர்க்கும் பாண்டியர்க்கும் அடிக்கடி நிகழ்ந்த போரில் ஈடு பட்டுப் பாண்டியர்க்கு வெற்றி பயந்து வந்தான். சாத்தனது பெருமை முற்றும் அவனுடைய போராண்மையிலும் தாளாண்மையிலும் கொடையாண்மையிலும் ஊன்றி நின்றது. இந் நலமுடைமை கண்ட நல்லிசைச் சான்றோர் இவனை நயந்து பாடிச்சிறப்பித்தனர். |