| விளக்கம்: குடவாயிற் கீரத்தனார் பெயர் குடவாயில் நல்லாதனா ரென்றும் ஏடுகளிற் காணப்படுகிறது.பெயர் வகையில் வேறுபாடுண்டாயினும் ஊர் வகையில் அஃதில்லாமை குறிக்கத்தக்கது. கொங்கு நாட்டிலும் குடவாயில்என்றோர் ஊர் பொங்கலூர்க்கா நாட்டிலுள்ளதெனக் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடிகரைக்கல்வெட்டொன்று (A. R. No.6 of 1923) கூறுகிறது. தம்மைப் புரக்கும் புரவலர் இறப்பின் , புரக்கப்படும் மகளிரும் வீரருமேயன்றிப் பரிசி லராகிய பாணரும் பிறரும் தம்மை ஒப்பனை செய்து கொள்ளாராகலின், பாணன் சூடான் பாடினியணியாள் என்றார்; பிறரும் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே (புறம்.238) என்பது காண்க. முல்லை மிக மென்மையுடையதாகையால் , அதனை யாழ்ப்பாணன், யாழ்க்கோட்டால் மெல்ல வாங்கிச் சூடுவானாயினான்; யாழ்க்கோட்டின் மென்மைபற்றி இவ்வாறு செய்வன் எனினுமாம் . யாழ்க்கோடு வளைந் திருத்தல் பற்றி, முல்லையை வாங்குதற்குஏற்றதாயிற்று. கொடிது யாழ்கோடு (குறள். 279) என்பர் திருவள்ளுவர். இதன் அமைதியை விபுலாநந்த அடிகள் கண்ட யாழ்நூல் யாழுறுப் பியலிற் காண்க. இளையோர் முதல் பாடினி யீறாகப் பலர்க்கும் பயன் படாமையின், பூத்தியோஎன்றார். இதற்குப் பழையவுரைகாரர் கூறும் உரை அறிந்து இன்புறத்தக்கது. --- 243. ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் ஒல்லையூர் கிழான் மகனான பெருஞ்சாத்தன் பேரிளையனாய் இருந்த காலத்தில் ஒருகால் தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் சான்றோர் அவனைக் காணச் சென்றார்.சாத்தனும் அவரை மிக்க அன்புடன் வரவேற்று இனிமை மிகப்பேசி அளவளாவினான். வேறுபல சான்றோரும் அங்கே கூடியிருந்தனர் . அக் கூட்டத்தில் இளமையின் வளமை பற்றிப் பேச்சுண்டாயிற்று. இளமையிற் சிறந்த வளமை இல்லாமையும், அக்காலத்தே இளைஞர் உள்ளம் இன்பக் களி யாட்டில் பெரிதும் ஈடுபடும் திறமும் பிறவும் விரிய ஆராயப்பட்டன. அக்கூட்டத்திருந்த சான்றோருள் தொடித்தலைவிழுத்தண்டினாரும், வேறு சிலரும் மிக்க முதியராய் இருந்தனர். முதுமையிலும் கழிந்த இளமைபற்றி அவரையுள்ளிட்ட சான்றோர் வளமையுறப் பேசுவது எல்லோர்க்கும் இன்பத்தை யுண்டு பண்ணிற்று. முடிவில் நம் தொடித்தலை விழுத்தண்டினர் இளமைச் செய்கைகளை ஒரு வகையால் தொகுத்துரைப்பாராய், மறையும் மாயமும் அறியாத இளையரொடு கூடி நீரிற் பாவை வைத்து விளைாயடியதும், நெடுநீர்க் குட்டங்களிற் குதித்து மணல் காட்டி மகிழ்ந்ததும், பிறவும் கூறி, இத்தகைய இளமை இப்போது எங்கோ சென்று ஒளிந்துவிட்டது; இப்போது அது கழிந்துவிடவே, மேனியில் நடுக்கமும் இருமல் கலந்த சொல்லும் தண்டூன்றியல்லது நடவாத தளர்ச்சியுமுடைய முதியராயினோம்; யாம் இப்போது இளமையை நினைப்பின் நெஞ்சில் இரக்க முண்டாகிறது என்பவர் இதனையே ஒரு பாட்டின் கண் வைத்துப் பாடினார். அப் பாட்டே இது. இதன்கண் தாம் கைக் கொண்டு செல்லும் தண்டினைத் தொடித்தலை விழுத்தண்டு என்று சிறப்பித்த நலங்கண்ட சான்றோர் இவரைத்தொடித்தலைவிழுத்தண்டினார்என அழைக்கலுற்றனர். அது பெரு வழக்கான மையின் , அவரதுஇயற்பெயர்மறைந்துபோயிற்று.
|