தறுகண் பேராண்மை என்ப - அஞ்சாதும் இரக்கமின்றியும் பகைவரொடு பொரும் கடுமறத்தைச் சிறந்த ஆண்டன்மை என்று சொல்வர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு (என்ப) - ஆயினும், அப்பகைவர்க்கு ஒரு தாழ்வு வந்தவிடத்து இரங்கி அதை நீக்குதற் பொருட்டு அவர்க்கு உதவி செய்தலை, அவ்வாண்டன்மைக்குக் கூர்மையென்று சொல்வர் மறநூலார். இராவணன் முதல் நாட்போரில் தன்படையும் படைக்கலமுந் தேருமிழந்து தன்னந்தனியனாய் நின்றபோது. இராமன் இரங்கி "இன்றுபோய் நாளைப் படையொடுவா." என்று கூறிவிடுத்ததாகவுள்ள கம்ப விராமாயணச் செய்தி, ஊராண்மைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாம். "ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த பூளை யாயின கண்டனை, யின்றுபோய்ப் போர்க்கு நாளை வாவென நல்கினன் நாகிளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல் (யுத்த 1218) இங்ஙனம் போர்க்களத்தில் தனித்து நின்ற பகைவர்க்குதவுதலும், புறங்கொடுத்தார் மீதும் அடைக்கலம் வேண்டினார் மீதும் படைக்கலம் தொடாமையுமான ஊராண்மையைத் 'தழிஞ்சி' என்னும் வஞ்சித்துறையாகப் புறப்பொருள் வெண்பாமாலை (3 : 20) கூறும். இரு கூற்றும் ஓரே சாராருடையதாகையால், 'என்ப' என்பது பின்னும் இயைந்தது. எஃகு ஆகுபெயர்.
|