பக்கம் எண் :

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

 

உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார்- எல்லாரும் உண்ணும் வகை உழவுத் தொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே, உரிமையுடன் வாழ்பவராவர்; மற்று எல்லாம் தொழுது உண்டு பின்செல்பவர்- மற்றோரெல்லாம் பிறரை வணங்கி அதனால் உண்டு அவர்பின் செல்லும் அடிமையரே.

உழவர் தம் விருப்பப்படியும் பிறர் விருப்பப்டியும் தொழில் செய்பவர் என்பது கருத்து. இது மக்கள் தொகை மிக்க இக்காலத்திற்கு ஏற்காது. தொல்காப்பியர் காலத்தில் அஃறிணையைக் குறித்த எல்லாம் என்னும் சொல் திருவள்ளுவர் காலத்தில் உயர்திணையையுங் குறித்தது வழக்குப் பற்றிய திணை வழுவமைதி. ஏகாரம் பிரிநிலை.