இலம் என்று ஆசைஇ இருப்பாரைக் காணின் யாம் பொருளில்லேம் என்று மனந்தளர்ந்து சோம்பியிருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும்- நிலமகள் என்னுந் தாய் தனக்குள் சிரிப்பாள். வறியவரெல்லாரும் நிலத்தை யுழுது பயிர்விளைத்தால், உணவு பெறுவதோடு அவர் வறுமையும் நீங்கும் என்பது கருத்து. நிலமகள் மாந்தரெல்லாருக்குந் தாயாயிருப்பதனாலும், அவளிடம் போதிய அளவு நிலமிருப்பதனாலும், உழவுத்தொழிலை மேற்கொள்ளாத ஏழைச் சோம்பேறிகளைக் கண்டு அவள் எள்ளி நகையாடுவதாகக் கூறினார். நல்லாள் எனபது கண்ணிற்கு நன்மையாகிய அழகுபற்றிப் பெண்ணிற்கு ஏற்பட்டதொரு பெயர். அச்சொல் இங்குப் பெண்பாலாகிய தாயைக் குறித்தது. 'அசைஇ' சொல்லிசை யளபெடை. 'இரப்பாரை' என்பது மணக்குடவ காலிங்க பரிப்பெருமாளர் கொண்ட பாடம். உழவுத்தொழில் செய்யாதவர் வறுமையடைவர் என்பதால், அடுத்த அதிகாரத்திற்கு இங்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது. பண்டைக் காலத்தில் மக்கள்தொகை மிகாது விளைநிலம் மிக்கிருந்ததனால் "இலமென்றசைஇ...........நல்லா ணகும்," என்று கூறினார் ஆசிரியர். அந்நிலைமையையே. "வித்துமேரு முளவா யிருப்ப எய்த்தங் கிருக்கு மேழையும் பதரே." என்னும் வெற்றிவேற்கைச் செய்யுளும் (68) குறிக்கும். ஆயின் இக்கூற்று, மக்கள்தொகை வரம்பிறந்தோடி எண்ணிலா வுழவர் அங்கைநிலமு மின்றி அங்கலாய்க்கும் இக்காலத்திற்கு, எள்ளளவும் ஏற்காது.
|