பொருட்பால் உறுப்பியல்-குடி அதிகாரம் 105. நல்குரவுஅஃதாவது, நுகர்வன யாவு மில்லாமை. நல்கூர்வது நல்குரவு. நல் நன்மை; கூர்தல் மிகுதல். நன்மையின்மையை நன்மை மிகுதி என்றது மங்கல வழக்கு, வெறுமையாகிய வறுமை நிரப்பு என்றது போல். இனி, நல்கு + ஊர்தல் என்று பகுத்து, பிறர் கொடுப்பதன் மேல் ஊர்ந்து செல்லுதல் என்று கூறினுமாம். உழவுத்தொழிலின் றேல் சோம்பேறிகள் மட்டுமன்றி ஒருநாடும் வறுமையடையும் என்னும் கருத்துப்பற்றி, இது உழவின்பின் வைக்கட்பட்டது. நல்குரவுண்டாகும் வழிகள்; முன்னோர் தேட்டின்மை, பெற்றோரின்மை, உழைப்பின்மை, மதிநுட்பமின்மை, பொருளாசையின்மை, தாயத்தாருங் கள்வருங் கொள்ளைக் காரருங் கவர்தல், குடியுஞ் சூதும் விலைமகளிருறவுமாகிய தீயவொழுக்கம். இயற்கைப் பேரழிவு நேர்மை என்பனவாம். |