பக்கம் எண் :

இன்பத்துப் பால்
களவியல்

அதிகாரம் 110. குறிப்பறிதல்

அஃதாவது, தலைமகன் தலைமகளின் காதற்குறிப்பை அவள் பார்வையினின்றும் செயல்களினின்றும் உய்த்துணர்தல். இயற்கைப் புணர்ச்சிக்குமுன் நிகழ்வதும் நிகழக்கூடியதும் இஃதொன்றேயாயினும், பொருளொப்புமை பற்றியும் சுருக்கம் பற்றியும், பாங்கியிற் கூடடத்திற்குமுன் தலைமகன் தோழிகுறிப்பினையறிதலும், அவள் தலைமக்களிருவர் குறிப்பினையுமறிதலும், இங்குச் சேர்த்துக் கூறப்பட்டுள என அறிக.

தகையணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுதற்கு அவள் குறிப்பறிதல் இன்றியமையாததாதலின் , இது தகையணங்குறுத்தலின் பின்னும் இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னும் வைக்கப்பட்டது.

 

இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

 

[தலைமகன் தலைமகள் காதற் குறிப்பை அவள் நோக்கினால் அறிந்தது ]

இவள் உன்கண் இருநோக்கு உள்ளது-இவளுடைய மையூட்டிய கண்கள் என்மீது இருவகையான நோக்குகள் கொண்டுள்ளன; ஒரு நோக்கு நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒன்று என்னிடத்து நோயைச் செய்வது, இன்னொன்று அந்நோய்க்கு மருந்தாவது.

அழகிற்காகவும் குளிர்ச்சிக்காகவும் தமிழ்ப்பெண்டிர் கண்ணிற்கு மையிடும் பண்டை வழக்குப்பற்றி 'உண்கண்' என்றார். நோய்நோக்கு தலைமகன்மேற் காதற்குறிப்பை வெளிப்படுத்தாத பொதுநோக்கு; மருந்து நோக்கு அதை வெளிப்படுத்தும் சிறப்பு. இதுவரை ஒருதலைக்காதலாகிய கைக்கிளையாயிருந்த காமநிலை, இன்று இருதலைக்காதலாகிய ஐந்திணயாகப் பெயரத்தொடங்கியமை இதனார் கூறப்பட்டது. கண்டே மகிழும் காதலன் இனி உண்டு மகிழும் வாய்ப்பையுங் கண்டான்.