[ இயற்கைப் புணர்ச்சி யிறுதிக்கட் சொல்லியது ] அனிச்சமே நன்னீரை - அனிச்சப் பூவே ! நீ மோப்பக் குழையும் நாணமுடைமையால் மற்றெல்லாப் பூவினும் நல்ல தன்மையை யுடையை ; வாழி - ஆதலால் நீ நீடுவாழ்க ! யாம் வீழ்பவள் நின்னினும் மெல்நீராள் - ஆனால் , எம்மால் விரும்பப் பட்டவளோ உன்னைவிட மெல்லிய தன்மையுடையவள் . இதை இன்றறிந்துகொள் . இது காமவின்ப மகிழ்ச்சி மயக்கத்தால் , கேட்குந போலவுங்கிளக்குந போலவும் அஃறிணை மருங்கின் அறைந்தது . இதுபோற் பின் வருவனவற்றிறகும் ஈதொக்கும் . ' அனிச்சம் ' ஆகுபெயர் . இவ்வுலகில் யானே மென்மையிற் சிறந்தேன் என்னும் செருக்கையினி யொழிவாயாக என்பது குறிப்பு . தழுவலால் ஊற்றினிமையைச் சற்று முன்பு அறிந்தானாகலின் . அதைப் பாராட்டினான் , இன்னீரள் என்னும் பாடம் சிறந்ததன்று .
|