பக்கம் எண் :

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே
னொள்ளமர்க் கண்ணாள் குணம்

 

( ஒருவழிந் தணந்துவந்த தலைமகன் , நீயிர் தணந்த ஞான்று எம்மை நினைத்தீரோ என்ற தோழிக்குச் சொல்லியது .)

ஒள் அமர்க் கண்ணாள் குணம் யான் மறப்பின் உள்ளுவன் - ஒளிபொருந்தியவாய் செய்யுங் கண்ணையுடையாளின் குணங்களை யான் என்றேனும் மறந்தேனாயின்நினைத்திருப்பேன் ; மறப்பு அறியேன் - ஆயின் , யான் ஒருபோதும் மறந்ததில்லை ஆதலால் நினைத்ததுமில்லை .

குணங்கள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு , அன்பு , கற்பு என்பன . ' மன் ' ஒழியிசைக்கண் வந்தது . இதுவரையுந் தலைமகன் கூற்று ; இனிவருவன தலைமகள் கூற்று . ஒருவழித் தணத்தலாவது , இரவுக்குறிக் காலத்திறுதியில் அலரெழுந்தபின் அது அடங்கும்வரை தலைமகன் சிலநாள் தன் ஊரின்கண் தங்கியிருத்தல் .