பக்கம் எண் :

இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே
யேதில ரென்னுமிவ் வூர் .

 

(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகள் ஆற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவிடத்து , அவள் இயற்பட மொழிந்தது .)

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் - என் கண் இமைக்குமாயின் உள்ளிருக்குங் காதலர் மறைவதை யறிந்து சிறிது நேரம் இமையாதே யிருப்பேன் ; அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கே , என் காதலர் அன்பிலரென்றும் , என்னைத் துயிலா நோயுறுத்தினாரென்றும் , பழிதூற்றும் இவ்வூர் .

தன் கருத்தறியாமை பற்றித் தோழியொடு புலந்து கூறுகின்றாளாதலின் , அவளை வேறுபடுத்து ' இவ்வூர் ' என்றாள் . ஒருபோதும் உள்ளத்திற் பிரியாதவரைப் பிரிந்தாரென்று நீ பழித்தல் தகாது என்பதாம் . 'ஊர்' வரையறுத்த ஆகுபெயர் ,