பக்கம் எண் :

யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு .

 

(செவிலிக் கறத்தொடு நின்றுவைத்து , யான் அறத்தொடு நிற்குமாறு எங்ஙனமென்று நகையாடிய தோழியொடு புலந்து , தலைமகள் சொல்லியது . )

அறிவு இல்லார் - அறிவிலாதார் ; யாம்பட்ட தாம் படா ஆறு - யாம் பட்ட நோய்களைத் தாம்பட்டு அறியாமையால் ; யாம் கண்ணின் காண நகுப - யாம் காதாற் கேட்குமாறு மட்டுமன்றிக் கண்ணாலுங் காணுமாறு எம்மை நகையாடுவர்.

தோழி அறத்தொடு நின்றமையை அறியாது புலக்கின்றாளா தலின் , அவளை அயலாளாக்கிக் கூறினாள் . ' கண்ணிற்காண ' என்றது முன் கண்டறியாமை யுணர்த்தி நின்றது . இது சேட்படுத்தி நகையாடிய தோழிக்குத் தலைமகன் கூறியதாகவுங் கொள்வர். தலைமகன் கூற்று முன்னரே ஏழாங் குறளொடு முடிந்துவிட்டமை யாலும், தோழியின் துணையை இன்றியமையாததாகக் கொண்ட தலைமகன் அவளை அறிவில்லாளென்று பழித்தல் இயல்பன்மையானும், அது பொருந்தாதென்க.