பக்கம் எண் :

பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர்
நல்குவ ரென்னு நசை.

 

(தலைமகன் பிரிவுணர்த்தியதைத் தெரிவித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.)

அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின்-என் காதற்பெருக்கையுங் கவவுக்கை யிறுக்கையும் கண்டறிந்த தலைவர் தாமே, நம் முன்நின்று தம் பிரிவை யுணர்த்தும் வன்னெஞ்சராயின்; நல்குவர் என்னும் நசை அரிது-அத்தன்மையர் பின்பு நம் ஆற்றாமையறிந்து வந்து பேரன்பு செய்வரென்னும் ஆசையை விட்டுவிட வேண்டியதுதான்.

இது தலைமகள் தன் இளமையினாலும் இல்லறத் தொடக்கநிலையினாலும், பொருளின் இன்றியமையாமையையும் ஆடவர் கடமையயும் உணராது காதலொன்றையே கருதிக்கூறிய கூற்றாகும். அருமை பெரும்பாலும் நிறைவேறாமை, செலவழுங்குவித்தல் பயன்.