பக்கம் எண் :

கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலு நாணுத் தரும்.

 

(அண்டையா ரறியாமல் மறைத்தல் , ஆண்டையார்க்குத் தூதுவிடல் என்னும் இரண்டனுள் ஒன்று செய்யவேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)

இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன் - இக்காம நோயை அக்கம்பக்கத்தார் அறியாவாறு மறைக்கவும் என்னால் முடியவில்லை ; நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத்தரும் - இனி , இந்நோயை நீக்குமாறு இதைத் தந்த காதலர்க்கு அறிவிக்கவும் வெட்கமாயிருக்கின்றது. என் செய்வேன் !

நோய் மேன்மேலும் மிகுதலாற் 'கரத்தலு மாற்றேன்' என்றும் , பிரிந்துபோனது அண்மைக் காலமே யாதலானும் இன்பவாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளீட்டுதலைத் தடைசெய்வது அறிவுடைமையாகாமையானும், நாணுத்தரும், என்றும் கூறினாள்

.