(இரவின் கொடுமை கூறி வருந்தியது.) இரா அளித்து - இவ்விரவு இரங்கத்தக்கதாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என் அல்லது துணை இல்லை - இவ்வுலகத்து மற்றெல்லா வுயிர்களையுந் தூங்க வைத்து விட்டதனால், இராமுழுதுந் தூங்காத என்னைத்தவிர வேறொரு துணையும் இல்லாதிருந்தது. நிலைபெற்ற வுயிர் ஒன்றும் இவ்வுலகத்தின்மையாலும், மாந்தரேயன்றி மற்றவுயிர்களும் இரவில் தூங்குவதாலும், மன் என்னுஞ்சொற்கு மற்றுப் பொருள் இங்குக் கொள்ளப்பட்டது. ஆயினும், சில மாந்தர் இரவிலேயே வழங்குவதனாலும், சில மாந்தர் இரவிலேயே அல்லது இரவிலுந் தொழில் செய்வதனாலும், எல்லாம் என்னுஞ் சொல் பெரும்பான்மை பற்றியதென்று கொள்ளப்படும். பொதுவாக இராக்காலமே தூங்கும் வேளையாதலாலும், பகலுழைப்பாளிகட்கு இரவில் தானாகத் தூக்கம் வந்துவிடுவதனாலும், இரவே தூங்கவைப்பதாகச் சொல்லப்பட்டது. துணையொடு கூடி இன்புறும் உயிர்களையெல்லாந் தூங்கவைத்துவிட்டு, துணையின்றி வருந்தும் என்னைமட்டும் தூங்கவையாது தனக்குத் துணையாக் கொண்டது, இக்கொடிய இரா என்னுங் கருத்தினளாதலால், ' அளித்து ' எதிர்மறைக் குறிப்பாம்.
|