(காதலரும் ஆற்றாராய்க் கடிதின் வருவர். நீ அவரொடு பேரின்பந் துய்ப்பாய் என்ற தோழிக்குச் சொல்லியது.) (இ-ரை.) தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர்-தம்மாற் காதலிக்கப்படுங் கணவர் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிர் பெற்றவரே ;காமத்துக் காழ் இல் கனி-பெற்றாரன்றோ கொட்டையில்லா நறுமணஇன் சுவைச் செழுஞ்சதைக் காமவின்பக்கனி நுகர்ச்சி! பெறுதலருமை நோக்கிப் ’பெற்றவர்’ என்றும், பேரின்பமாதல் பற்றி ’காழில் கனி’ என்றும், கூறினாள். நம் காதலர் பிரிந்துபோனதொடு திரும்பிவராமலுமிருத்தலின், யாம் அக்கனியைப் பெற்றிலேம் என்பதாம். காமம் என்பதை மரத்தின் பெயராகக் கொள்ளின், அத்துச்சாரியை வேற்றுமை வழியில் வந்ததேயாம். ஏகாரம் தேற்றம்.
|