(பரத்தையரிடமிருந்து நின்றும் வந்ததாகக் கருதப்பட்ட தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர் விட்டுவிடுதல்; அலந்தாரை அல்லல் நோய் செய்த அற்று- முன்னமே துன்பமுற் றழிந்தாரை அதன் மேலுந் துன்புறுத்தினாற் போலும். நீர் பிறர்பாற் செல்லுதலின் நும்மைப் பெறாது புலந்திருக்கின்ற பரத்தையரிடஞ் சென்று , அவர் புலவி நீக்கித் தழுவீராயின் அவர் ஆற்றார் என்பதாம் . 'ஆல்' அசைநிலை.
|