உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உயர்ந் தோரொடு பொருந்த வொழுகுதலைக் கல்லாதார் ; பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களைக் கற்றவரேனும் அறிவிலாதாரே . உலகம் என்றது வரையறைப்பட்ட இடவாகுபெயர் . அறநூல்களில் எல்லா வொழுக்க முறைகளும் சொல்லப்படாமையானும் , காலந்தோறும் பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழ்தலானும் , ஒழுக்க வகையில் உயர்ந்தோரைப் பின்பற்றுதல் இன்றியமையாததாயிற்று . கல்வியால் அறிவும் அறிவால் ஒழுக்கமும் பயனாதலின் , உயர்ந்தோரொடு பொருந்த வொழுகலைக் கல்லாதார் பல நூல்களைக் கற்றும் அறிவில்லாதவரேயாவர் . ஒழுகுதலைக்கற்றலாவது பின்பற்றி யொழுகுதல் . |