அறத்துப் பால் இல்லறவியல் அதிகாரம் 20. பயனில சொல்லாமைஅஃதாவது, வேலை செய்யாத ஓய்வு நேரத்திலும் தனக்கேனும் பிறர்க்கேனும் அறம் பொருளின்பங்களுள் ஒன்றும் பயவாத வீண் சொற்களைச் சொல்லாமை. பொய், குறளை, கடுஞ்சொல் , பயனில் சொல் என்னும் நால்வகைச் சொற்குற்றங்களுள் , பொய் இல்லறத்தார்க்குப் பயன்படுமாறும் துறவறவியலிற் கண்டிக்கப்படுவதனாலும், கடுஞ்சொல் இனியவை கூறலானும் குறளை புறங்கூறாமையானும் விலக்கப்பட்டமையாலும் , எஞ்சி நின்ற பயனில் சொல்லைச் கடிவது இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒன்றைச் சொல்வதற்குக் கேட்பாரும் வேண்டியிருத்தலின் , இருவர்க்குக் குறைந்து சொல்லாட்டு நிகழ்த்த முடியாது. இருவரோ பலரோ கூடி வீண் பேச்சுப் பேசும் போது, நகையாடி மகிழ்தற் கேனும் பிறரைப் பற்றிப் புறங்கூற்றாகப் பேச நேருமாதலின் , அத்தொடர்பு பற்றி இது புறங்கூறாமையின் பின் வைக்கப்பட்டது. |