பக்கம் எண் :

நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை.

 

நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க - உத்திக்குப் பொருத்தமான நல்ல அளவைகளால் ஆராய்ந்து பார்த்து அருளைமேற் கொள்க; பல் ஆற்றால் தேரினும் அஃதே துணை - பல்வேறு சமயநெறிகளால் ஆராய்ந்தாலும் இறுதியில் அவ்வருளே துணையாக முடியும்.

காட்சி, கருத்து, ஒப்பு, உரை, இன்மை, எதிர்நிலை (அருந்தாபத்தி), சார்பு (இயல்பு), உலகுரை, ஒழிபு, உண்மை என அளவைகள் மொத்தம் பத்தென்பர். அவை யாவும் முதல் நான்கனுள் அடங்கும். அன்பின் முதிர்ச்சியாகிய அருள் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த அறப்பண் பாதலானும், இம்மை மறுமை வீடாகிய மும்மைக்கும் உதவுதலானும், அஃதே துணை என்றார். உத்தியாவது பகுத்தறிவிற்குப் பொருந்து முறை. உத்தல் - பொருந்துதல். உத்தி யென்பது வட மொழியில் யுக்தி எனத் திரியும்.