பக்கம் எண் :

பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

 

பொய்யாமை பொய்யாமை ஆற்றின்- ஒருவன் வாய்மை யறத்தைத் தொடர்ந்து செய்ய வல்லவனாயின்; பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று- அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தலே நன்றாம்.

அடுக்குத்தொடர் இரண்டனுள் முன்னது தொடர்ச்சி பற்றியது; பின்னது தேற்றம் பற்றியது. வாய்மை யொன்றே எல்லாவறங்களின் பயனையுந் தருவதாலும் எல்லா வறங்களையும் ஒருவன் மேற்கொள்ளுதல் அரிதாதலாலும், பல வறங்களை ஒருங்கே மேற்கொள்ளின் அவற்றுட் சில தவறுவதால் ஏனையவற்றின் பயனையும் ஏனையறங்களின் பயனையும் பெறுவதே சிறந்ததாகும் என்பதையுணர்த்த 'அறம்பிற செய்யாமை நன்று' என்றார்.

வாய்மையைக் கடைப்பிடிப்பவன் தான் செய்யுந் தீவினைகளையெல்லாம் பிறருக்கு மறைக்காதிருக்க வேண்டுமாதலானும் அவை பிறரால் அறியப்படின் தான் தண்டனை யடைவது திண்ணமாதலாலும், ஒவ்வொன்றாக எல்லாத் தீவினைகளையும் விட்டுவிடுவன் என்பது கருத்து.

மணக்குடவர் ஈரடுக்குத் தொடர்களையும் தழாத் தொடராகக் கொள்ளாது தழுவு தொடராகக் கொண்டு "பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின், பிற அறங்களைச் செய்தல் நன்றாம் அல்லது தீதாம்" என்று இக் குறளுக்குப் பொருளுரைப்பர்.