அறத்துப் பால் துறவறவியல் அதிகாரம் 34. நிலையாமைஅஃதாவது , நிலவுலகத்தில் தோன்றும் அறுவகை யுயிர்களும் பிறிதோருயிராற் கொல்லப்படா விடத்தும், எப்பருவத்தும் பிணியாலும், பிணியில்லாது வாழ்நாள் நீடினும் தத்தம் இனத்திற்குரிய கால வெல்லையில் மூப்பாலும், ஒருவகையானும் தடுக்கப்பெறாது தம் முடம்பி னின்று நீங்கி நிலையாமற் போதல். இந்நிலையாமை நொடிப்பொழுதில் ஆயிரக்கணக்கான மறவர் போர்க்களத்திற் கொலையுண்பதால் விளங்கித் தோன்றுவதாலும், கொல்லாமையில் லாவிடத்தும் தப்பாது நிகழும் என்பதை யுணர்த்தற்கும் , கொல்லாமையின் பின் வைக்கப்பட்டது. துன்பமிக்க உலக வாழ்வும் நிலையாது நீங்குவதாலும் , அந்நீக்கமும் நிலையாது மீண்டு மீண்டும் எல்லையில்லாது பிறவி தோன்றும் என்னும் அறிவினாலும், அப்பிறவிகளுள் கீழ்ப்பிறவியொடு எரியுல கத்துன்பமும் இடையிடும் என்னும் அச்சத்தாலும், உலகவாழ்க்கையில் வெறுப்புற்று இறைவன் திருவடியடைந்து துன்பமற்றதும் என்று முள்ளதுமான பேரின்பத்தைப்பெறும் முயற்சியை விரைந்து செய்யத் தூண்டுவது, நிலையாமையுணர்ச்சியே. |