தூய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்குத் தூயநிலைமையாகிய வீடென்று சொல்லப்படுவது அவாவில்லாமையாம்; அது வாய்மை வேண்ட வரும் - அவ்வவா வில்லாமை மெய்யான பரம்பொருளை வேண்டத்தானே வரும். அறியாமையும் அவாவும் முதலிய மாசுமறுவற்றதினால் வீட்டைத்தூய்மையென்றும் , கருமகத்தைக் கரணகமாக்கித் 'தூய்மையென்பது அவாவின்மை ' யென்றும், என்று முள்ள ஒரே மெய்ப் பொருள் பரம்பொருளாதலின் அதை வாய்மையென்றும், பரம்பொருளாற்பெறப்படும் சிறந்த பேரின்பத்தை நோக்கின் இழிந்த பிறவித்துன்பத்திற்கேதுவாகிய ஆசை நீங்குமாதலின் 'வாய்மைவேண்டவரும்' என்றுங் கூறினார். 'வாய்மை' ஆகுபெயர். 'மற்று' வினைமாற்றிடைச்சொல். 'தூஉய்மை,' 'வாஅய்மை' இரண்டும் இசைநிறையளபெடை.
|