பக்கம் எண் :

துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால
வூட்டா கழியு மெனின்.

 

உறல் பால ஊட்டா கழியும் எனின் - அடைய வேண்டிய துன்பங்களை அடைவிக்காது தீயூழ்கள் நீங்குமாயின்; துப்பரவு இல்லார் மன் துறப்பர் -நுகர்ச்சி யில்லாத வறியர் பெரும் பாலும் துறவியராவர்.

பரிமேலழகர் ஒழியிசைப் பொருளாகக் கூறுவது பாவிலேயே அடங்கியிருத்தலால், மன்னிடைச் சொற்கு மிகுதிப் பொருள் கொள்ளப்பெற்றது. துன்பங்களின் பன்மைபற்றி அவற்றை யூட்டும் ஊழையும் பன்மையாகக் கொண்டார். வலிமிகாமையால் 'ஊட்டா' எதிர் மறைமுற்றெச்சம். துறவுநிலை இயற்கையாக அமைந்திருந்தும் அதை வீடுபேற்றிற்குப் பயன் படுத்தாவாறு ஊழ்கெடுக்குமென்பது இங்குக் கூறப்பட்டது.