உலகம் தழீஇயது ஒட்பம் -உயர்ந்தோரை நட்பாகத் தழுவிக் கொள்ளுதல் நல்லறிவாம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு -அந்நட்பொழுக்கத்தில் வளர்தலுந்தளர்தலுமின்றி ஒருநிலைப்பட்டு உறுதியாய் நிற்றல் அறிவுடைமையாம். கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ. நீர்ப்பூ என்னும் நால்வகைப் பூக்களுள், நீர்ப்பூ ஒருவேளை மலர்வதும் ஒருவேளைகுவிவதுமாக நிலைமாறுந் தன்மையது. ஏனைமூன்றும் மலர்ந்தபின் மீண்டுங்குவியாது ஒரே நிலையின வாவன. இங்ஙனம் ஒரு நிலைப்பட்டிருப் பதையே 'மலர்தலுங் கூம்பலுமில்லது' என்றார். 'உலகம் ' வரையறைப்பட்ட இடவாகுபெயர். 'தழீஇயது' இன்னிசையளபெடை. இதில் வந்துள்ளது ஒருமருங் குருவகம். மலர்தற்கும் கூம்பற்கும் செல்வ வறுமைகளும் கரணியமாகலாம். "கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி-தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாரும் நட்பாரும் இல்". (நாலடி. 215).
|