அறிவு உடையார் எல்லாம் உடையார் -அறிவுடையார் வேறொன்றுமிலராயினும் எல்லாம் உடையவராவர்; அறிவு இலார் என் உடையரேனும் இலர் - அறிவில்லாதவர் பிறவெல்லா முடையராயினும் ஒன்றுமில்லாதவராவர். எல்லாச் செல்வங்களும் அறிவாலேயே ஆக்கவுங் காக்கவும் படுதலின் , அறிவுடையாரை 'எல்லா முடையார்' என்றும்; பிறசெல்வங்களெல்லாம் ஏற்கெனவே யமைந்திருப்பினும் அவற்றை அழியாமற்காத்தற்கும், அவற்றிற்குத் தெய்வத்தால் அழிவுநேர்ந்த விடத்துப் புதிதாய்ப்படைத்தற்கும், வேண்டிய கருவியாகிய அறிவின்மையின், அறிவிலாரை ' என்னுடைய ரேனுமிலர்' என்றும், கூறினார். "நுண்ணுணர் வின்மை வறுமை யஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்" - (நாலடி. 251).
|