நீர் நிலத்து இயல்பான் திரிந்து அற்று ஆகும் - நீரானது தான் சேர்ந்த நிலத்தின் வகையினால் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையதாம்; மாந்தர்க்கு அறிவு இனத்து இயல்பு அது ஆகும் - அதுபோல, மாந்தரது அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் வகையால் தன் தன்மை வேறுபட்டு அவ்வினத்தின் தன்மையதாம். இனி, மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும், என ஒரே தொடராக்கினும் அமையும். இப்பொருள்கோட்கு, 'அறிவு' எழுவாய்; 'அற்றாகும்' பயனிலை. இரண்டாம் 'ஆகும்' பெயரெச்சம் . அணி உவமை. இரு தொடராக அல்லது சொல்லியமாக (வாக்கியமாக)க் கொள்ளின் எடுத்துக்காட்டுவமை. மழைபெய்யுமுன் வானத்தின் கண் நின்றநிலையில் தன்னியல்பிலிருந்த நீர் , நிலத்தொடு சேர்ந்த விடத்துத்தன் நிறமும் சுவையும் மணமும் ஆற்றலும் நிலத்திற் கேற்ப வேறுபட்டாற்போல், மாந்தன் அறிவும் அவன் தனித்து நின்றவழித் தன்னியல்பிலிருத்து, ஓர் இனத்தொடு கூடியவழி அவ்வினத்திற்கேற்ப நோக்குந் தன்மையும் வேறுபடும் என்பதாம். அன்னது -அற்று (அன் +து); "மலரோடு (பூவோடு) சேர்ந்த நாரும் மணம்பெறும்" என்பது நல்லினத்தோடு சேர்வதன் விளைவையும். "பன்றியொடு சேர்ந்த கன்றும் பவ்வீதின்னும்" என்பது தீயினத்தோடு சேர்வதன் விளைவையும், நுவலாது நுவலுதல் காண்க. நுவலுதல் நுணித்துச் சொல்லுதல்.
|