அழிவதும்-வினைமேற்கொள்ளும் போது அன்று அதனால் அழிவதையும்; ஆவதும் -அழிந்தாற்பின் ஆவதையும்; ஆகி வழிபயக்கும் ஊதியமும் -வினை முடிந்தபின் தொடர்ந்து வரும் ஊதியத்தையும் ; சூழ்ந்து செயல் -ஒப்பு நோக்கி ஆராய்ந்து தக்கதாயின் செய்க, தகாததாயின் விட்டு விடுக. தக்கதாவது, அற்றைச் செலவினும் வரவுமிக்குப் பிற்றை வரவு முள்ளது; அல்லது அற்றை வரவு செலவொத்துப் பிற்றை வரவுள்ளது; அல்லது அற்றை வரவினுஞ் செலவு மிக்குப் பிற்றைப் பெரு வரவுள்ளது; அல்லது பிற்றை வரவின்றி அற்றைச் செலவினும்வரவு மிக்கிருப்பது. தகாததாவது, பிற்றை வரவின்றி அற்றை வரவு செலவொத்தோ வரவினுஞ் செலவுமிக்கோ இருப்பது; அல்லது அற்றை வரவினுஞ் செலவுமிக்குப் பிற்றைச் சிறுவரவுள்ளது. 'அழிவதூஉம்' 'ஆவதூஉம்' இன்னிசை யளபெடைகள்.
|