பக்கம் எண் :

செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும் .

 

செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன் வினைக்குச் செய்யத்தகாதன வற்றைச் செய்யின் கெடுவான் . செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி , அதற்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமை யானுங் கெடுவான் .

செய்யத்தகாதன வாவன ; ஆகா வினையும் பயனில் வினையும் சிறுபயன் வினையும் தெளிவில் வினையும் துயர்தருவினையும் கெடுதல் வினையுமாம் . செய்யத்தக்கன இவற்றின் மறுதலையாம் . இவ்விருவகை வினைகளையும் முறையே செய்தல் செய்யாமையால் , அறிவு ஆண்மை படை அரண்பொருள் ஆகிய ஐவகை ஆற்றல்களுள் இறுதி மூன்றும் ஒடுங்கிப் பகைவர்க் கெளியனாவனாதலால் , இரண்டுங் கேட்டிற்கேதுவாம் . செய்யத்தக்க என்பது செய்தக்க எனக்குறைந்து நின்றது . இனி , "பெருஞ்செய் யாடவர்" (நெடுநல் . 171)என்பதிற்போலச் செய் என்பது செய்கை என்று பொருள் படும் தொழிற்பெயர் என்றுமாம் .