பக்கம் எண் :

உளவரை தூக்காத வொப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

 

உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை - தனக்குள்ள ஈகைவலியளவை நோக்காது செய்யும் ஒப்புரவொழுகலால் ; வள வரை வல்லைக்கெடும் - ஒருவனது செல்வத்தின் அளவு விரைந்து கெடும் .


ஈகை வலியளவெனினும் ஈயப்படும் பொருளளவெனினும் ஒன்றே.

"களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின் பனுவற் பாண ருய்த்தெனக்
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை யரிய விழையணி மகளிரொடு
சாயின் றென்ப ஆஅய் கோயில்."

(புறம் . 127)

என்பது இக்குறட்கு எடுத்துக் காட்டாம் . ஆயினும் ,

"ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
லிற்றுக்கோட் டக்க துடைத்து ," (220)
"சாதலின் இன்னாத தில்லை யினிததூஉம்
ஈத லியையாக் கடை." (230)


என்று ஆசிரியரும் ,

"பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்
னாடிழந் ததனினு நனியின் னாதென
வாள்தந் தனனே தலையெனக் கீயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்"

(புறம் . 165)

என்று பெருந்தலைச்சாத்தனாரும்,

"சாயின் றென்ப ஆஅய் கோயில்
சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில்
பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி
யுரைசா லோங்குபுக ழொரீஇய
முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே."

(புறம். 127)

என்று உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் பாடியிருத்தலால், தனிப்பட்ட பெருஞ்செல்வர்க்கு ஒப்புரவு தருமென்றும், பொறுப்பு, வாய்ந்த பெருநிலவரசர்க்கு அளவறிந்து வாழ்வதே கடமை யென்றும், முடிவு செய்யலாம். இந்நான்கு குறளாலும் பொருள் வலியறியுந்திறங் கூறப்பட்டது.