குணம் நாடி - குணமுங் குற்றமு மாகிய இரண்டு முடையாரே உலகத்திலிருத்தலால் , ஒருவன் குணங்களை முதலில் ஆராய்ந்து ; குற்றமும் நாடி - அதன்பின் அவன் குற்றங்களையும் ஆராய்ந்து ; அவற்றுள் மிகை நாடி - அவ்விரு பகுதிகளுள்ளும் அளவில் மிகுந்ததை ஆராய்ந்து ; மிக்க கொளல் - மிகுந்ததை அளவையாகக் கொண்டு அவன் தகுதியுண்மை யின்மையைத் துணிக. ஒருவனுடைய குற்றங்கள் ஒன்றிற்கு மேற்பட்டனவாகவும் விளங்கித் தோன்றுவனவாகவு மிருந்து , அவனை எங்ஙனந் தெளிவதென்று மயக்கம் நேரின் , அம்மயக்கத்தைத் தெளிவிப்பது இக்குறள் . குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து , குணம் மிகின் வினைக் குரியவனென்றும் , குற்றம் மிகின் அல்லனென்றும் , தீர்மானிக்க என்றார், மிகையுடையது மிகையெனப்பட்டது . மிகை பன்மை பற்றி அல்லது தலைமை பற்றித் தீர்மானிக்கப்படுவது.
|