பக்கம் எண் :

தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக்
காரண மின்றி வரும் .

 

தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் - முன்பு அன்பான வுறவினராயிருந்து ஏதேனுமொரு தக்க கரணியம் பற்றித் தன்னைவிட்டுப் பிரிந்து போனவர் மீண்டும் வந்து அன்பாக வுறவாடல் ; அமராமைக் காரணம் இன்றிவரும் - இடையில் அன்பாற் பொருந்தாமைக்கு ஏதுவாயிருந்த நிலைமை நீங்கின் தானே நேர்வதாம்.

அரசனது தவற்றொழுக்கத்தினாலோ அவன் தமக்கு ஏற்காதன செய்ததனாலோ அவனை விட்டுப் பிரிந்துபோன மெய்யன்பரான உறவினர் , அக்குற்றங்கள் நீங்கின் , தாமாகத் திரும்பவந்து சேர்ந்து கொள்வராதலால் , அதற்கு ஒரு முயற்சியும் வேண்டியதில்லை யென்பது கருத்து . அமர்தல் பொருந்துதல் அல்லது அன்பு கூர்தல் . 'அமராமைக் காரணமின்றி' என்பதால் , முன்பு அது நேர்ந்தமை அறியப்படும். 'சுற்றம்' என்றது சுற்றமாயொழுகுதலை.