பக்கம் எண் :

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த
னிழைத்திருந் தெண்ணிக் கொளல்.

 

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை - கரணிய மின்றித் தன்னிடத்தினின்று பிரிந்துபோய்ப் பின்பு ஒரு பயன் நோக்கித் திரும்பிவந்த உறவினனை ; வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல் - அரசன் அப்பயனைச் செய்து வைத்து ஆராய்ந்து தழுவிக்கொள்க.

'உழைப்பிரிந்து' என்று வெறிதாய்க் கூறினதினாலும் , காரணத்தின் வந்தானை என்று விதந்ததினாலும் , பிரிதற்குக் காரணமின்மை வெளியாம் . கருதிவந்த பயனைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்து போய்ப் பகையோடு கூடுவானாதலின் , 'இழைத்திருந்து' என்றும் , அன்பின்றிப் பிரிந்துபோய்ப் பின்னும் பயன் நோக்கி வந்தமையின் 'எண்ணிக் கொளல்' என்றுங் கூறினார் . முதற்காலத்தில் தமிழக அரசர் மூவேந்தராகவே யிருந்ததினால், அரசன் வேந்தனெனப் பெற்றான். முந்தின குறளில், தீமை செய்யப் பிரிந்துபோய் அது நீங்கியவழித் திரும்பிவந்த உறவினனையும் , இக்குறளில், கரணிய மின்றிப் பிரிந்துபோய் ஒரு பயன் நோக்கித் திரும்பிவந்த உறவினனையும் , தழுவிக்கொள்ளும் முறைகள் கூறப்பட்டன என வேறுபாடறிக.