கண்ணோட்டம் என்னும் கழிபெருங்காரிகை உண்மையான்-கண்ணோட்டம் என்று சொல்லப்படும் மிகச் சிறந்த அழகு பண்புடையாரிடத்தில் இருப்பதனாலேயே ; இவ்வுலகு உண்டு- இவ்வுலகம் அழியாது இருந்து வருகின்றது. கண்ணோட்டம் மக்களெல்லாரிடத்திலும் இருக்கவேண்டிய பண்பேனும் , அரசருக்கு இன்றியமையாது வேண்டுவதாம்.நாடுமுழுதும் அரசன் கையிலிருத்தலால்,அவனிடத்திற் கண்ணோட்டமுண்மை குடிகள் இன்பமாக வாழ்வதற்கும் ,இன்மை ஏமமின்றி மாள்வதற்கும் ஏதுவாம். அகத்தழகு புறத்தழகு என அழகு இருவகைத்தாதலின், கண்ணோட்டம் காரிகையெனப்பட்டது.மேலும் அதன் சிறப்பு நோக்கி 'கழிபெரு' என ஈரடையுங் கொடுக்கப் பெற்றது. இது மீமிசைச் சொல். "கண்ணோட்டம்...உண்டிவ்வுலகு". என்பது,"உண்டாலம்ம விவ்வுலகம் .....பிறர்க்கென முயலுநருண்மை யானே". (புறம். 182) என்பது போன்றது.
|