ஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க - அறிதற்கரிய மறைபொருட்களை யறிந்து வந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை , பிறரறியச் செய்யா தொழிக ; செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும்- செய்தானாயின் தன் உள்ளத்திற் போற்றிக் காக்கவேண்டிய மருமச் செய்திகளைத் தானே எல்லார்க்கும் வெளிப்படுத்தினவன்ஆவன். ஒற்றனுக்குப் பிறரறியச் சிறப்புச் செய்யின் ,இவன் யாரென்றும் அவன் சிறப்புப் பெறக் கரணியம் என்ன வென்றும் பிறரால் வினவப்படுதலின், 'புறப்படுத்தானாகும் மறை' என்றார். மறையாவது அவன் ஒற்றன் என்பதும்,அவன் ஒற்றியறிந்து கூறிய செய்தியுமாகும்.அம்மறை வெளிப்படின், பயனின்றிப் போவதுடன் அவ்வொற்றனையும் அதன்பின் ஆளமுடியாதாம். இதனால் ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யும் வகை கூறப்பட்டது.
|