உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் -அரசராயினும் பிறராயினும் தாம் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சி பற்றிய கருத்ததாகவே யிருக்க; மற்று-பின்பு ;அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அவ்வுயர்ச்சி ஊழ்வலியால் தவறினும் தவறாத தன்மையதே. உயர்வு தவறினும், உள்ளினவரின் உயரிய நோக்கத்தையும் அவர் செய்த பெருமுயற்சியையும் அறிவுடையோர் பாராட்டுவராதலானும். "தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்." (குறள்.620.) ஆதலானும், ' தள்ளாமை நீர்த்து 'என்றார். உம்மை தள்ளுவதன் அருமை குறித்து நின்றது.
|