பக்கம் எண் :

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

 

நெடுநீர் மடி மறவி துயில் நான்கும்- நீட்டிக்குந் தன்மை, சோம்பல், மறதி, தூக்கம் என்னும் நான்கும்; கெடும் நீரார் காமக் கலன்- இறக்கும் நாள் நெருங்கியவர் விரும்பியேறும் மரக்கலங்களாம்.

நெடுநீர் என்பது விரைந்து செய்யக் கூடியதை நீட்டித்துச் செய்யும் இயல்பு.மடி என்பது முயற்சிசெய்யாது சும்மாயிருக்குஞ் சோம்பல். மறவி என்பது செய்ய வேண்டியதை மறந்து விடுதல் .துயில் என்பது பகலுந்தூங்குதல் அல்லது தூக்க நிலையிலிருத்தல்.இந்நான்கும் ஊக்கமின்மையின் வகைகளாதலின் உடனெண்ணப்பட்டன.நெடுநீர் என்னுங் காலநீட்சி பற்றிய பண்புப் பெயர் அக்காலத்தில் நிகழும் செயல்மேல் நின்றது. கெடுநீர்-இறப்பு நெருங்கிய தன்மை. நெடுநீர் முதலிய நான்கும் ஊக்கமில்லார்க்கு இன்பந்தருவனபோற் காட்டிப் பின்பு மீளாத் துன்பமாகிய அழிவைத்தருவ தால், அவை வாழ்நாளெல்லை யடுத்தவர்க்கு இன்ப நீர்ச்செலவு நிகழ்த்துவதுபோற் காட்டி, அவர் விரும்பி ஏறியபின் அவரை நடுக்கடலில் வீழ்த்திவிடும் மரக்கலங்களுக்கு ஒப்பாகும் என்றார். ' காமக்கலன், என்பதால் விரும்பியேறுதல் பெறப்படும். இத்தொடர்க்கு விரும்பிப்பூணும் அணிகலன்கள் என்று உரைப்பது பொருந்தாது .பொருந்த வேண்டுமாயின் , எரிமருந்து கலந்த அணிகள் என்று கொள்ள வேண்டும். இக்குறளில் அமைந்துள்ளது உருவகவணியாம்.