தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ் - தம் மக்களின் சிறுகைகளால் துழாவிக் குழைக்கப் பட்ட சோறு; அமிழ்தினும் ஆற்ற இனிதே - பெற்றோர்க்கு அவர்களின் மீதுள்ள காதல் மிகுதியால் தேவருணவினும் மிக இனிமையுடையதாம். தம் என்னும் சொல், பெற்றோரின் உடற்கூறாயிருந்து அவருடம்பினின்றும் வெளிப்பட்ட மக்களின் நெருங்கிய தொடர்பை உணர்த்தும். தேவருண வென்றது மக்களின் குருட்டு நம்பிக்கையான உலக வழக்கைத் தழுவியது. "படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே." (புறம். 188) "பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற் றென்னுடைய ரேனு முடையரோ-இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ்செய்யவாய் மக்களையிங் கில்லா தவர்".(நள. கலித்தொடர்.) என்னும் பாக்கள் இங்குக் கவனிக்கத் தக்கன. |