பக்கம் எண் :

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன்
மாட்சியின் மாசற்றார் கோள்.

 

வேட்பத்தாம் சொல்லி - தாம் பிறர்க்கு ஒன்றைச் சொல்லும்போது அவர் பின்னுங் கேட்க விரும்புமாறு இனிதாகவும் தெளிவாகவும் சொல்லி; பிறர் சொல் பயன் கோடல் - பிறர் சொல்லைத்தாம் கேட்கும்போதுமட்டும், அதிற் சொல்லினிமையும் பொருள் விளக்கமும் இலக்கண வொழுங்கும் இல்லா திருப்பினும், அதன் பொருளை உள்ளவாறு அறிந்து கொள்ளுதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் - குற்ற மற்ற சிறப்புடைய அமைச்சரின் இயல்பாம்.

பிறர்க்கு மேலும்மேலுங் கேட்க விருப்ப முண்டாகுமாறு எதையும் இன்பமாக எடுத்துக்கூறும் ஆற்றல், எல்லார்க்கும் இயற்கை யாகவோ செயற்கையாகவோ அமையாமையானும் , பிறர் சொல்வதன் பொருளை உணர்ந்து கொள்வதே தம் கருமவெற்றிக்கு வேண்டியதாதலானும், "வேட்ப ........... கோள்" என்றார்.